சின்ன வெங்காயம் சாகுபடிக்கு சில குறிப்புகள்!
சின்ன வெங்காயம் சாகுபடிக்கு தோதான நிலம், விதைப்பு, நாற்றங்காலுக்கு உரமிடும் முறை உள்ளிட்ட தகவல்களை கடந்த இதழில் கண்டோம். அதன் தொடர்ச்சியாக நடவுப்பாத்தி தயாரிப்பு, களை கட்டுப்பாடு உள்ளிட்ட தகவல்களை இந்த இதழில் காண்போம்.
நடவுப்பாத்தி தயாரிப்பு
நடவு செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின்போது ஏக்கருக்கு 20 வண்டி மக்கிய தொழுவுரத்தைப் போடுவது நல்லது. அதற்குப் பின் நடவு பாத்திகளில் 20 செ.மீ. இடைவெளிகளில் பார்கள் அமைத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு பார்கள் அமைத்த பின்பு, பார்களின் கீழ் பகுதியில் யூரியா, சூப்பர் பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களை அடியுரமாக இடவேண்டும். நடவு பாத்திகளில் அடியுரம் இடுவது செடிகளின் முன் பருவ வளர்ச்சிக்கு மிக முக்கியம். இது செடிகள் ஆரம்ப காலத்தில் நன்கு தளிர்த்து வீரியத்துடன் வளர மிகவும் அவசியமாகிறது. விதை பயிருக்கு ஒரு ஏக்கருக்கு யூரியா - 26 கிலோ, சூப்பர் - 144 கிலோ, பொட்டாஷ் - 19 கிலோ ஆகியவற்றை அடியுரமாக இட வேண்டும்.
நடவு
நன்கு பராமரிக்கப்பட்ட நாற்றங்கால்களில் இருந்து எடுக்கப்பட்ட வீரிய நாற்றுக்களையே நடவிற்கு பயன்படுத்த வேண்டும். பார்கள் முழுவதும் நன்கு நனையும் அளவிற்கு நீர் பாய்ச்சி 10 செ.மீ. இடைவெளிகளில் நாற்றுகளை நட வேண்டும். நட்ட பின்பு மூன்றாவது நாள் மறுபடியும் நீர் பாய்ச்ச வேண்டும். இவ்வாறு நீர் பாய்ச்சுவதால் நட்ட நாற்றுகள் நன்கு வேர்விட்டு தளிர்க்க ஏதுவாக இருக்கும்.
களை கட்டுப்பாடு
வெங்காய உற்பத்தியில் களைகளை ஆரம்பத்திலிருந்தே கட்டுப்படுத்துவது மிக அவசியம். ஏனெனில், வெங்காய வளர்ச்சிக்கு களைகள் போட்டியாக இருந்தால் தரமான வெங்காய அறுவடை செய்வது கடினம். நடவுப் பாத்திகளில் நட்ட 20 - 25 நாட்களில் ஒருமுறையும் 40 - 45 நாட்களில் ஒருமுறையும் ஆட்களைக் கொண்டு கைக்களை எடுக்க வேண்டும். வெங்காய நடவு பாத்திகளில் களைகள் இல்லாமல் பராமரிப்பது தரமான விதை வெங்காயம் பெற உதவும்.
மேலுரம்
வெங்காயப் பயிருக்கு மேலுரம் இடுவது மிக அவசியம். ஏனெனில், நாம் அறுவடை செய்யும் வெங்காயம் தரமானதாக இருக்க வேண்டும். இல்லையெனில், விதைப்பயிர் செய்வதற்கு வெங்காயத்தை பயன்படுத்த இயலாது. எனவே, 26 கிலோ யூரியாவை நாற்று நட்ட 30வது நாளில் மேலுரமாக இடவேண்டும். இவ்வாறு மேலுரம் இடுவதால் இலைகள் நன்கு தளிர்த்து வெங்காயம் நல்ல வளர்ச்சி பெற்று தரமானதாக இருக்க உதவும்.
பயிர் பாதுகாப்பு
விதைப்பயிர்களை நோய் தாக்குதல் இன்றி பாதுகாப்பது தரமான விதை உற்பத்திக்கு மிகவும் அவசியம். எனவே, அவ்வப்போது தென்படுகின்ற பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட பயிர் பாதுகாப்பு முறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.
கலவன் நீக்குதல்
விதை உற்பத்திக்காக நடவு செய்யப்பட்ட வெங்காய உற்பத்தி செய்யும் பாத்திகளில் குறிப்பிட்ட குணாதிசியங்களிலிருந்து மாறுபட்டு தெரிகின்ற எல்லாப் பயிர்களையும், களைகளையும் நீக்கிவிட வேண்டும். இவ்வாறு நீக்குவதால் உண்மையான விதை உற்பத்திக்கு நடவு செய்ய நல்ல தரமான வெங்காயம் கிடைப்பதுடன் ரகத்தின் பாரம்பரிய தன்மைகளை மேலும் பாதுகாப்பது எளிதாகும். செடிகளின் உயரம், இலைகளின் நிறம் மற்றும் வடிவங்கள் கொண்டு
கலவன்களை நீக்கலாம்.
அறுவடைக்கு ஏற்ற தருணம்
பாத்திகளில் வெங்காயத் தாள்கள் (இலைகள்) 50 சதவீதம் மடங்கி விழுந்த ஒரு வாரம் அல்லது நட்ட 90 - 100 நாட்களில் வெங்காயத்தை பிடுங்கி எடுக்க வேண்டும். அச்சமயத்தில் வெங்காயம் முதிர்ச்சி அடைந்திருக்கும். பிடுங்கிய வெங்காயத்தை தாள்களுடன் (இலைகளுடன்) வயல்களிலேயே 3 - 5 நாட்கள் பரப்பிப் பதப்படுத்த வேண்டும். அதன்பின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப நிழலிலோ அல்லது அறுவடை செய்த வயல்களிலோ பதப்படுத்த வேண்டும். பின்னர் வெங்காயத்தின் கழுத்துப் பகுதியில் 2.5 செ.மீ விட்டு தழைகளை வெட்டி எடுத்துவிடவும்.
தரமான உண்மைவிதை உற்பத்தி
வெங்காய விதை உற்பத்தியில் இரண்டாவது பருவத்தில்தான் உண்மையான விதை உற்பத்தி நடக்கும். இப்பருவத்தில் அக்டோபர் - நவம்பர் மாதத்தில் உற்பத்தி செய்த வெங்காயத்தை நடவிற்கு பயன்படுத்துகிறோம். இப்பருவத்தில் நாம் கையாளும் தொழில்நுட்பங்களே விதை உற்பத்தித் திறன் மற்றும் தரத்தை நிர்ணயிக்கும். எனவே, தரமான விதை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ள வேண்டும்.
வெங்காயத் தேர்வு மற்றும் தரம் பிரித்தல்
வெங்காயத்தின் நிறம், அளவு மற்றும் வடிவம் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ரகத்தின் வெங்காயங்களைத் தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்வு செய்த வெங்காயங்களை 15 நாட்கள் பதப்படுத்த வேண்டும். மேலும் ரகத்தேர்வு செய்த வெங்காயத்தில் 4 - 6 செ.மீ. சுற்றளவு கொண்ட வெங்காயங்களை மட்டுமே விதைப்புக்கு பயன்படுத்த வேண்டும். மீதமுள்ள வெங்காயங்களை காய்கறிக்காக விற்று விடலாம்.