ஒரே சோபாவில் திக்..திக்.. மனநிலையில் இருந்த மாஜி, சிட்டிங் மலராத கட்சி தலைவர்கள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘இலைக்கட்சியில் இருந்து மலராத கட்சிக்கு தாவியதும் வரவேற்பு பேனரில் ஒன்றிய அமைச்சர் படத்தை சிறிதாகவும், தனது படத்தை பெரிதாகவும் போட்டு ஷாக் கொடுத்தாராமே மாஜி மேயரான பெண்மணி..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சியில் மேயர் பதவியை அனுபவித்துவிட்டு, திடீரென அந்த கட்சியில் இருந்து வெளியேறி, தாமரை கட்சியில் இணைந்து, அந்த கட்சியின் மாநில பொறுப்பில் உள்ளார் கார்த்திகை பெண்மணி. கட்சியின் மாநில பொறுப்பை பெற்றதுமே தனக்கென்று மூன்று மாவட்டங்களிலும் ஆதரவாளர்களை சேர்த்துள்ள இவர், வரும் தேர்தலில் இலைக்கட்சி கூட்டணியில் இரண்டெழுத்து இனிஷியல் கொண்ட குப்பமான தொகுதிக்கு காய் நகர்த்தி வருகிறாராம்..
கூட்டணியில் தொகுதி யாருக்குன்னு இன்னும் முடிவாகாத நிலையில இவரோட இந்த முயற்சி இலை கட்சிக்காரங்க மட்டுமின்றி தற்போதைய சிட்டிங் எம்எல்ஏவை கடுப்பாக்கியிருக்கிறதாம்.. ஆனா இதைப்பற்றி கவலைப்படாத கார்த்திகை பெண்மணி அடுத்தடுத்த நகர்வுகளில் ஈடுபட்டிருக்காராம்.. தன்னோட பிறந்த நாளுக்காக வேலூரில் சில இடங்களில் தனது ஆதரவாளர்களால் வைக்கப்பட்ட பேனர்களில் ‘குப்பம் சட்டமன்றமே’ன்னு குறிப்பிட்டிருந்தாங்களாம்..
அதோட இல்லாம கார்த்திகையின் ஆதரவாளர்கள் சமீபத்தில வேலூருக்கு வந்த ஒன்றிய அமைச்சரை வரவேற்கும் வகையில் வைத்த பேனரில் அமைச்சரின் படத்தை சிறிதாகவும், கார்த்திகை பெண்மணியின் படத்தை பெரிதாகவும் போட்டு ஷாக் கொடுத்தாங்களாம்.. இது இப்போ மலர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளையும் கொதிப்படைய வைச்சிருக்காம்.. இந்த பேனர்களை எல்லாம் மலர் கட்சியினர் மொபைல் மூலம் போட்டோ எடுத்து மாநில தலைமைக்கும், டெல்லி தலைமைக்கும் அனுப்பி வர்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘டெல்லிக்கு போய் புகாரும் கொடுக்கீங்க... நேரில் வந்து வாழ்த்தும் சொல்றீங்களே எப்படி என கேட்டதை அறிந்து தாமரை நிர்வாகிகள் அதிர்ச்சியில் இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் கவர்னருடன் புல்லட்சாமி மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாம்.. ரேஷன் கடைகள் மூலம் அரிசி வழங்கும் கோப்புக்கு முறைகேடு நடப்பதாக கவர்னர் ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தினாராம்.. பின்னர் ஒன்றிய அரசின் கூட்டுறவு நிறுவனம் மூலம் அரிசி வழங்க நடவடிக்கை எடுத்தாராம்.. இதுபோன்று புல்லட்சாமியின் முடிவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை கவர்னர் எடுத்து வர்றாராம்.. இதனால் ஆளுங்கட்சி கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்துவதாக புல்லட்சாமி மற்றும் அமைச்சர்கள் புலம்புகின்றனராம்..
இதுதொடர்பாக தாமரையை சேர்ந்த நடுநாயகர், அமைச்சர்கள், நிர்வாகிகள் டெல்லி தாமரை தலைமையிடம் கவர்னர் மீது பல்வேறு புகார்களை நேரிடையாக சென்று கூறிக்கிட்டு இருக்காங்களாம்.. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு தாமரையை சேர்ந்த நிர்வாகிகள் புதுச்சேரி ராஜ் நிவாஸில் இருந்த கவர்னரை சந்தித்து வாழ்த்து தெரிவிச்சிருக்காங்க.. அப்போது டெல்லி சென்று என்னை மாற்ற வேண்டும் என கூறுகிறீர்கள்.. நேரிடையாக வாழ்த்தும் கூறுகிறீர்களே எப்படி? என வாழ்த்த வந்த நிர்வாகிகளிடம் கவர்னர் கேட்டது அவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளதாம்.. டெல்லிக்கு சென்று புகார் கொடுத்தால் கவர்னருக்கு தெரிந்துவிடுகிறதே என உள்ளூர் தாமரை நிர்வாகிகள் என்ன செய்வதுனு தெரியாமல் புலம்பி வர்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மலராத கட்சியின் மாஜி தலைவருக்கும், சிட்டிங் தலைவருக்குமான பனிப்போர் இப்போதைக்கு முடியுற கதையில்லை என கட்சியினரே பேசிக்கிறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மலராத கட்சியின் மாஜி தலைவருக்கும், சிட்டிங் தலைவருக்கும் தொடர்ந்து முட்டல் மோதல் இருந்துட்டு இருக்கு.. சிட்டிங் தலைவர் பங்கேற்கிற பல நிகழ்ச்சிகளில் மாஜி கலந்துகொள்ளாம புறக்கணிச்சிட்டு வர்றாரு..
சிட்டிங் தலைவரை ெகாஞ்சம் கூட மதிக்கிறதே இல்லைங்கிற புகார் டெல்லி வரைக்கும் போய் அங்கிருந்து செம டோஸ் விட்டும் கூட இன்னும் இருவருக்கும் இடையே புகைச்சல் இருந்துட்டேதான் இருக்காம்.. இந்த சூழ்நிலையில் மான்செஸ்டர் மாநகரில் நேற்று நடந்த விழா ஒன்றில் விழா ஏற்பட்டாளர்கள் மாஜிக்கும், சிட்டிங் தலைவருக்கும் ஒரே ஷோபாவில் அமரும் வகையில் சீட் ஒதுக்கி இருந்தார்களாம்.. அதோடு யார் யார் எந்த இடத்தில் அமர வேண்டும் என்ற பெயரும் அதில் தெளிவாக குறிப்பிட்டு இருந்தார்களாம்..
விழாவிற்கு முதலில் வந்த மாஜி தலைவர் தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்துகிட்டாராம்.. பின்னர் வந்த சிட்டிங் தலைவர் தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை அதாவது மாஜி தலைவரோடு சோபாவில் அமர விருப்பம் இல்லாம அருகில் உள்ள ஒரு சோபாவில் போய் அமர்ந்து கொண்டாராம்.. பிறகு கட்சி மூத்த நிர்வாகிகள் சிட்டிங் தலைவரிடம் பேசிய பிறகு வேண்டாத வெறுப்பாக இருவரும் ஒரே ஷோபாவில் அமர்ந்தார்களாம்..
விழா தொடங்குவதற்கு முன்பாக இருவரும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்ததோடு சரியாம்.. அப்புறம் இருவரின் மனசும் திக்..திக்..கென அடித்துக்கொண்டிருக்க விழா முடியுற வரைக்கும் பேசவே இல்லையாம்.. சிட்டிங் தலைவருக்கும், மாஜிக்கும் இடையே நடக்கிற பனிப்போர் இப்போதைக்கு முடிய வாய்ப்பு இல்லைன்னு மலராத கட்சிக்காரங்களே கமெண்ட் பண்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘குக்கரும், பலாப்பழக்காரரும் மலராத கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறியது இலைக்கட்சி தரப்பினரை ரொம்பவே கலங்க செய்திருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘லிங்கசாமியின் பெயர் ெகாண்ட நதி மாவட்டத்தில், இலைக்கட்சியை விட குக்கர்காரர் மற்றும் பலாப்பழக்காரரின் ஆதரவாளர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறதாம்.. கடந்த தேர்தலில் இந்த மாவட்டத்து தொகுதியில் போட்டியிட்ட குக்கர் தரப்பினர் குறிப்பிடும்படியான வாக்குகள் பெற்றாங்களாம்..
இதனால், மலராத கட்சி கூட்டணியில் குக்கரும், பலாப்பழமும் இருப்பது நமக்குதான் சாதகம் என்ற கணக்கில் இலைக்கட்சியினர் கூட்டல், கழித்தல் கணக்கு போட்டு வந்தாங்க.. ஆனால், திடீரென குக்கர்காரரும், பலாப்பழக்காரரும் மலராத கட்சி கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது இலை தரப்பினரை ரொம்பவே அப்செட்டாக்கியுள்ளதாம்.. ஏற்கனவே மாவட்டத்தில் நடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 4 தொகுதிகளில், ஒரு தொகுதியை மட்டும்தான் இலைக்கட்சி போராடி கைப்பற்றிருக்கு..
இந்த நிலை நீடித்தால் 2026 சட்டமன்ற தேர்தலில் அதுவும் இருக்காது என்ற நிலை ஏற்படுமே என்ற கவலையில் இலைக்கட்சியினர் ஆழ்ந்துள்ளனராம்.. குக்கர் தரப்பினரோ வரும் தேர்தலில் இலை தரப்பு குறிப்பிட்டு சொல்லுமளவுக்கு வாக்குகளை பெற்று விடக் கூடாது என்ற நோக்கத்தில், தற்போதே இலைக்கு எதிரான வேலையை துவக்கி விட்டார்களாம்.. இது இலை தரப்பினரை ரொம்பவே கலங்கச் செய்துள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.