3வது ஒருநாள் போட்டியில் 200 ரன் வித்தியாசத்தில் ஆப்கன் அபார வெற்றி: 3-0 என வங்கதேசம் ஒயிட் வாஷ்
அபுதாபி: ஆப்கானிஸ்தான்-வங்கதேசம் கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் அபுதாபியில் நடந்து வந்தது. இதில் முதல் 2 போட்டியிலும் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில் 3வது மற்றும் கடைசி போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 293 ரன் எடுத்தது. அதிகபட்சமாக இப்ராஹிம் சத்ரான் 97 ரன்னில் (11பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) ரன்அவுட்டாகி சதத்தை தவறவிட்டார். முகமது நபி நாட் அவுட்டாக 37 பந்தில் 4 பவுண்டரி, 5 சிக்சருடன் 62 ரன் விளாசினார். ரஹ்மானுல்லா குர்பாஸ் 42 ரன் எடுத்தார்.
பின்னர் களம் இறங்கிய வங்கதேச அணியில், தொடக்க வீரர் சைஃப் ஹாசன் 43 ரன் எடுக்க மற்ற யாரும் ஒற்றை இலக்கை ரன்னை தாண்ட வில்லை. 27.1 ஓவரில் 93 ரன்னுக்கு வங்கதேசம் சுருண்டது. இதனால் 200 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் பவுலிங்கில் பிலால் சமி 5, ரஷித்கான் 3 விக்கெட் எடுத்தனர். இந்த வெற்றி மூலம் 3-0 என ஆப்கன் தொடரை கைப்பற்றி வங்கதேசத்தை ஒயிட் வாஷ் செய்தது. பிலால் சமி ஆட்டநாயகன் விருதும், இப்ராஹிம் சத்ரான்(213ரன்) தொடர் நாயகன் விருதும் பெற்றனர். முன்னதாக நடந்த டி.20 தொடரை 3-0 என வங்கதேசம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.