சதங்களின் ராஜா கிங் கோஹ்லி: ஒரு நாள் போட்டிகளில் ரோகித் உலக சாதனை: 352 சிக்சர்கள் விளாசல்
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா, 51 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 57 ரன் குவித்து ஆட்டமிழந்தார். இந்த 3 சிக்சர்களுடன் சேர்த்து, 269 ஒரு நாள் போட்டி இன்னிங்ஸ்களில் ரோகித் விளாசிய சிக்சர் எண்ணிக்கை 352 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம், ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா அரங்கேற்றி உள்ளார். இந்த பட்டியலில், 369 இன்னிங்ஸ்களில் 351 சிக்சர் அடித்து முதலிடத்தில் இருந்து வந்த பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடி 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இப்பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெயில் (331 சிக்சர்) 3ம் இடத்திலும், இலங்கையின் ஜெயசூர்யா (270 சிக்சர்) 4ம் இடத்திலும், இந்தியாவின் எம்எஸ் தோனி (229 சிக்சர்) 5ம் இடத்திலும் உள்ளனர். ரோகித் சர்மா நேற்று விளாசிய 57 ரன்களை சேர்த்து, மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து அவர் எடுத்த ரன்களின் எண்ணிக்கை, 19959 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 41 ரன்கள் எடுத்தால், 20,000 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ள சச்சின் டெண்டுல்கர் (34357), விராட் கோஹ்லி (27673), ராகுல் டிராவிட் (24064) அடங்கிய பட்டியலில் ரோகித் இணைவார்.