ஒரு தொகுதிக்கு மலராத கட்சியை சேர்ந்த 3 பேரும் இலைக்கட்சி சீனியர்களும் மல்லுக்கட்டி நிற்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘ஐந்து ஸ்டேஷனுக்கு தூக்கி அடிச்சும் கூட பஞ்சாயத்து பேசி முடிக்கும் ஸ்டார் லேடி காக்கி தினமும் பை நிரம்பாம வீட்டுக்கு போறதில்லையாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டம், பள்ளி கொண்ட ஏரியாவுல உள்ள காவல் நிலையத்துல ரெண்டு ஸ்டார் லேடி காக்கி ஒருத்தவங்க, ஒரு மாசத்துக்கு முன்னாடித்தான் டிரான்ஸ்பர்ல வந்தாங்களாம்.. இவங்க விஜிலென்ஸ் ரெய்டுல சிக்கிடுவோம்னு சொல்லி மருத்துவ விடுப்புல போய்ட்டு அதுக்கப்புறம் மேலிட ரெக்கமண்ட்ல திரும்பவும் பள்ளி கொண்ட நிலையத்துக்கு வந்தவங்களாம்.. ஏற்கனவே அந்த நிலையத்துல பணி செஞ்சதால, பெட்டி கேஸ்ல இருந்து பேட்டல் கேஸ் வரைக்கும் எல்லாத்துக்கும் ‘ப விட்டமின்’ பாய்ந்தால்தான் வேலை நடக்குதாம்.. எந்த மாதிரியான புகாரா இருந்தாலும் வழக்குப்பதிவு வரைக்கும் கொண்டு போகாம சம்பந்தப்பட்ட பார்ட்டிகள வர வெச்சு அரை நாள் ஆனா கூட பரவால்லனு உட்கார்ந்து கட்டப்பஞ்சாயத்து பண்ணி முடிச்சு வச்சுட்டு ரெண்டு பக்கமும் வாங்க வேண்டியதை வாங்கி பையை நிரப்பிடுறாங்களாம்.. இது ஒரு பக்கம் இருக்க, விபத்து ஏற்பட்டு வர்ற வண்டிங்க, விபத்துல இறந்துட்டு கேஸ் கொடுக்க வர்றவங்க என எந்த பாரபட்சமும் பாக்காம சம்திங் வாங்கிடுறாங்களாம்.. அதுக்கப்புறமாத்தான் வேலையாம்.. பாதுகாப்புக்கு டியூட்டி போட்டா உடல்நிலைய காரணம் காட்டி அம்மணி மறுத்துடுறாராம்.. இரவு பாரா டியூட்டி போட்டா நள்ளிரவே ஸ்டேசன்ல ஆள் இல்லாம வீட்டுக்கு கிளம்பிடுறாராம்.. இதையெல்லாம் சரிகட்ட உயர் காக்கிகளுக்கு வாரமிருமுறை வீட்ல இருந்து அறுசுவை விருந்து தயாரிச்சு ஸ்டேசனுக்கே எடுத்து வந்து அம்மணி கையாலயே விருந்தோம்பல் தடபுடலா நடக்குதாம்.. வர்ற வருமானத்த துளி கூட சக காக்கிங்க கண்ணுல காட்டாம அம்மணி வாரி சுருட்டிகினு போறத பாத்த மத்த காக்கிங்க புலம்பல் சத்தம் மாவட்ட காக்கி வரைக்கும் போயிருக்காம்.. ஏற்கனவே மாவட்ட தலைநகர் உள்பட ரெண்டு வருஷத்துல அம்மணிக்கு ஆயுதப்படை பனிஷ்மென்ட் உள்பட 5 ஸ்டேஷனுக்கு தூக்கி அடிக்கப்பட்டு இருக்காங்க.. அப்படி இருந்தும் திருந்தலையேன்னு பேசிக்கிறாங்க.. மாவட்ட உயர் காக்கி நடவடிக்கை விரைவில் பாயும்னு விஷயம் தெரிஞ்சவங்க சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஒரு தொகுதிக்கு மலராத கட்சியை சேர்ந்த 3 பேர் மல்லுக்கட்டி நிற்க, இலைக்கட்சி சீனியர்களும் கோதாவில் இறங்கி விட்டாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகர் மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கு.. மாவட்டத்தில் மலராத கட்சிக்கு பெரிய ஆதரவு எல்லாம் கிடையாது. ஆனாலும், 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தொகுதியாவது வெல்ல வேண்டுமென போராடி வருது.. குறிப்பாக தூங்கா நகரின் தெற்கே உள்ள ஒரு தொகுதி மீது ஒரு கண் வைச்சிருக்காங்களாம்.. இந்த தொகுதிக்குள் குறிப்பிட்ட சமூகத்தினரின் வாக்குகள் கணிசமாக உள்ளதால், மலராத கட்சியின் பெண் பிரமுகர், இத்தொகுதியில் அடிக்கடி ரவுண்டு வருகிறாராம்.. இவர் போதாதென்று, கடந்த எம்பி தேர்தலில் ரெண்டாவது இடம் பிடித்த அக்கட்சியின் பேராசிரியர் ஒருவரும் இந்த தொகுதியை கேட்டு மல்லுக்கட்டி வருகிறாராம்.. தேசிய தலைமைக்கு இவர் ரொம்ப நெருக்கம். அதேசமயம், மாநில தலைமைக்கு சுத்தமாக செட் ஆகாது. இதை மனதில் கொண்டு பெண் பிரமுகர், மாநில தலைமைக்கு தொடர் தூது விட்டு வருகிறாராம்.. தலைவரின் தூங்கா நகர் பயணத்தின்போது பணத்தை தண்ணீராக செலவழித்தாராம்.. மறுபுறம் இனிப்பான பெயர் கொண்ட ஒருவரும், நான்தான் கட்சியில் சீனியர். சீட் எனக்குத்தான் என அவர் பங்குக்கு டப் பைட் கொடுக்கிறாராம்.. ஒரு தொகுதிக்கு மலராத கட்சியில் 3 பேர் மல்லுக்கட்டி நிற்கும்போது, ‘ஆமா.. நாங்க அங்கே போட்டியிட சீட் கேட்க மாட்டோமா’ என இலைக்கட்சி சீனியர்கள் சிலரும் கோதாவில் நிற்கின்றனராம்.. தேர்தலுக்கு முன்பே தூங்கா நகரம் பரபரப்பு தீயை பற்றிக் கொண்டு திரிகிறது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கட்சியை உருவாக்கி உச்சத்துக்கு கொண்டு வந்தது நான். கட்சியை மீட்டுக்கொடுங்கன்னு நான் கைகட்டி நிற்கவான்னு கேட்டு, பிரதமரை சந்திக்க மறுத்துட்டாராமே தைலாபுரத்துக்காரர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தைலாபுர தோட்டத்துக்காரர், மகனின் நடவடிக்கையில் முற்றிலும் மனம்நொந்து போயிருக்காராம்.. கட்சி ரெண்டு துண்டாக உடைந்திருந்த சமயத்தில், தந்தை அசந்திருந்த நேரத்தில் கட்சியும், சின்னமும் எனக்கு தான் என தேர்தல் ஆணையத்திற்கு சென்று ஆர்டர் காப்பியை வாங்கிட்டாராம்.. ரெண்டும் மகனின் கைக்கு சென்றபிறகு தான் தந்தை தரப்பு விழித்ததாம்.. ஆணையத்தின் கதவை தட்டிப்பார்த்தும் எந்த முன்னேற்றமும் இல்லையாம்.. இதனால் கோர்ட் கதவை தட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ள நிலையில், புதியதாக ஒரு கட்சியையும் தொடங்குவதற்கு தந்தை தரப்பு ஏற்பாடுகளை செஞ்சிக்கிட்டிருப்பதாக தகவல் கசிஞ்சியிருக்கு.. அய்யா பாமக என்ற பெயரை தேர்ந்தெடுத்து அதற்கான அடிமட்ட வேலையும் செஞ்சிக்கிட்டிருக்காங்களாம்.. அதேநேரத்தில் தந்தையை அழைச்சிக்கிட்டு வாருங்கள் என மகனிடம் டெல்லி உள்துறை மந்திரி சொல்லிபுட்டாராம்.. ஆனால் மகனோ எதுவாக இருந்தாலும் என்னிடம் மட்டுமே பேச வேண்டும். எல்லாமே என்னிடம் தான் இருக்குதுன்னு சொன்னாராம்.. அதேநேரத்தில் தந்தையிடமும் ஆரம்பகால தொண்டர்கள் நிறைந்திருக்காங்களாம்.. இதனால் எங்களுக்கென தனியாக சீட் கொடுங்கள்.. உங்களது தலைமையிலான கூட்டணிக்கு மட்டும் பிரசாரம் செய்வோமுன்னு தந்தை தரப்பு சொல்லி பாத்திருக்காங்க... அதெப்படிங்க ரெண்டு துண்டாக உடைந்த கட்சியில் ரெண்டு பேருக்கென தனித்தனியாக யாராவது சீட் ஒதுக்குவாங்களான்னு ஒரு கேள்விய கேட்டாங்களாம்.. இதனால் மனசொடிஞ்சு போயிட்டாங்களாம்.. கோவை வந்த பிரதமரை சந்தித்து பேசலாமுன்னு தந்தையிடம் போய் மூத்த நிர்வாகிகள் அழைப்பு விடுத்திருக்காங்க.. ரொம்பவே உஷ்ணமான தோட்டத்துக்காரரோ, கட்சியை உருவாக்கி உச்சத்துக்கு கொண்டு வந்தது நான் என எல்லோருக்கும் தெரியும். எனது கட்சியை மீட்டுக்கொடுங்கள் என நான் போய் கைகட்டி நிற்கவான்னு, நெஞ்சை தொடுவது போல ஒரு கேள்வியை கேட்டாராம்.. மனிதாபிமானம் இருந்தால் அவர்களே எனக்கு மீட்டுக்கொடுப்பார்கள் என்று மனதுருகி சொன்னாராம்.. இதனை கேட்ட பத்து மா.செ.க்களின் கண்கள் வேர்த்துப்போச்சாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.