ஓணம் பண்டிகை சிறப்பு விற்பனை தோவாளை மலர் சந்தைக்கு 1000 டன் பூக்கள் வருகை விடிய விடிய நடந்த வியாபாரம்: கேரள வியாபாரிகள் குவிந்தனர்
ஆரல்வாய்மொழி: ஓணம் பண்டிக்கையொட்டி தோவாளை சந்தையில் சுமார் 1000 டன் பூக்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது. அவற்றை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
தோவாளை மலர் சந்தை தமிழ்நாடு அளவில் புகழ் பெற்றது. இங்கு மதுரை, திண்டுக்கல், ஓசூர் மற்றும் உள்ளூர் பகுதிகளான குமாரபுரம், ஆரல்வாய்மொழி, தோவாளை, செண்பகராமன்புதூர் ஆகிய பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக தினசரி கொண்டு வரப்படுகின்றன. கேரளா மாநிலம், நெல்லை, தூத்துக்குடி போன்ற பகுதிகளுக்கும் இங்கிருந்து பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்தநிலையில் தோவாளை மலர் சந்தையில் ஓணம் பண்டிக்கையொட்டி சிறப்பு மலர் சந்தை நேற்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கி விடிய, விடிய நடைபெற்று வருகிறது. மலர் சந்தையில் விற்பனைக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 1000 டன் பூக்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. லாரி, டெம்போக்களிலும், தலை சுமையாகவும் வியாபாரிகள் பூக்களை கொண்டு வந்து குவித்துள்ளனர்.
தற்போது பூக்கள் விலை அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு கிலோ ஒன்று ரூ. 400க்கு விற்கப்பட்ட பிச்சி, 1200 ரூபாய்க்கும், மல்லிகை பூ 1500 ரூபாய்க்கும் விற்பனையானது. அதேபோல் கேந்தி 70ல் இருந்து 100 ரூபாய்க்கும், தாமரை ஒன்று 8 ரூபாயில் இருந்து 15க்கும், வாடாமல்லி 50 ரூபாயில் இருந்து 100 க்கும் மரிகொழுந்து செவ்வந்தி, அரளி, துளசி என்று அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.
கேரளாவை சேர்ந்த சில்லறை, மொத்த பூ வியாரிகள், பொதுமக்கள் என்று ஏராளமானோர் நேற்றில் இருந்து தோவாளையில் குவிந்து உள்ளனர். அவர்கள் போட்டி போட்டு கொண்டு பூக்களை வாங்கி செல்கிறார்கள். ஆகவே கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பூக்களின் விற்பனை அதிகரித்து இருப்பதாகவும், சுமார் ஆயிரம் டன் வரை தோவாளை சந்தைக்கு பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் வியாபாரிகள்
தெரிவித்தனர்.