மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த 'ஓணம்' திருநாள் நல்வாழ்த்துகள்: எடப்பாடி பழனிசாமி
சென்னை: ஓணம் பண்டிகையையொட்டி, 'மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த 'ஓணம்' திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; "திருஓணம் திருநாளை வசந்த கால விழாவாக உவகையுடன் கொண்டாடி மகிழும், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த 'ஓணம்' திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திருமால் வாமன அவதாரம் பூண்டு மாபலிச் சக்கரவர்த்தியை அடக்கி, பின்னர் அம்மன்னன் வேண்டிய வண்ணம் மக்கள் அனைவரும் எப்போதும் சுபிட்சமாக இருக்கவும், அவர்களை ஆண்டுதோறும் காண வேண்டும் என்ற அவரது விருப்பத்தையும் ஏற்று அருள் புரிந்தார். அதன்படி, மாபலிச் சக்கரவர்த்தி மக்களைக் காண வரும் நன்நாளே திருவோணம் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
பத்து நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின்போது, மலையாள மொழி பேசும் மக்கள் தங்கள் வீடுகளின் முன்புறம் அரிசி மாவினால் கோலமிட்டு, அதனை வண்ணப் பூக்கள் கொண்டு அலங்கரித்து, நடுவே குத்துவிளக்கேற்றி, புத்தாடை உடுத்தி, அறுசுவை உணவு உண்டு, ஆடல், பாடல், விளையாட்டுகளுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவர்.
திருவோணத் திருநாளான இந்த நன்னாளில், இல்லந்தோறும் அன்பும், அமைதியும் நிலவட்டும்; மகிழ்ச்சியும், செல்வமும் பெருகட்டும் என்று மனதார வாழ்த்தி, மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த "ஓணம்" திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்குகிறேன்" என தெரிவித்துள்ளார்.