ஓணம் பண்டிகை முடிந்து வெளியூர் திரும்பியவர்களால் பாலக்காடு ரயில் நிலையத்தில் அலைமோதிய பயணிகள்
பாலக்காடு : ஓணம் பண்டிகை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பயணிகளால் பாலக்காடு ரயில் நிலையத்தில் நேற்று கூட்டம் அலைமோதியது.
ஓணம், மிலாடிநபி, சதயதினக் கொண்டாடங்கள் தொடர்விடுமுறை முடிந்து அரசு மற்றும் தனியார் அலுவலக பணிகளுக்கு திரும்பிய பயணிகள், பள்ளி, கல்லூரிகளின் விடுமுறை முடிந்து திரும்பிய மாணவ, மாணவிகள், விழாவிற்கு வந்துவிட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பியவர்கள் என பாலக்காடு சந்திப்பு ரயில் நிலையத்தில் நேற்று பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவில் காணப்பட்டது.
இதனால், பாலக்காடு சந்திப்பில் இருந்து புறப்படும் பாலக்காடு- கோயம்புத்தூர், பாலக்காடு- கோயம்புத்தூர்- ஈரோடு, பாலக்காடு- திருச்சி, பாலக்காடு- சென்னை, பாலக்காடு- திருவனந்தபுரம், மதுரை- பாலக்காடு- திருவனந்தபுரம், பாலக்காடு- தூத்துக்குடி பாலருவி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் பயணிகள் கூட்டநெரிசல் அதிகளவில் இருந்தது.
டிக்கெட் கவுன்டர்களில் பயணிகள் டிக்கெட் எடுப்பதற்காக நீண்டவரிசையாக காத்திருந்தனர். ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ், விரைவு ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. திருவிழா முடிந்து சொந்த ஊர்களுக்கு கைக்குழந்தை, குடும்பத்தினருடன் செல்கின்ற பயணிகள் பலர் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற வண்ணமும் இருந்தனர்.