பாலக்காடு மாவட்டத்தில் ஓணம் திருவிழாவை அத்தப்பூ கோலமிட்டு கொண்டாட்டம்
பாலக்காடு : பாலக்காடு மாவட்டத்தில் ஓணம் திருவிழாவை மக்கள் அத்தப்பூ கோலங்கள் அமைத்து மகாபலி மன்னரை வரவேற்று வெகுவிமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
பாலக்காடு மாவட்டத்தில் ஓணம் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஓணம் திருவிழாவை முன்னிட்டு மக்கள் கேரள பாரம்பரிய ஆடைகள் அணிந்து வீட்டின் முன்பாக ஊஞ்சல் ஆடிப்பாடி, அத்தப்பூ கோலங்கள் அமைத்தும், மகாபலி மன்னரை வீட்டின் முன்பாக பிரதிஷ்டை செய்து படையல்கள் படைத்து பூஜைகள் செய்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
மேலும் புத்தாடைகள் அணிந்து பாலக்காடு மாவட்டத்திலுள்ள குன்னத்தூர்மேடு, காச்சம்க்குறிச்சி பெருமாள், கல்பாத்தி லட்சுமி நாராயணப்பெருமாள், சித்தூர் பகவதி கோவில், பாலக்காடு வடக்கந்தரை மற்றும் புத்தூர் திருப்புராய்க்கல் பகவதி உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பாலக்காடு, கல்பாத்தி மற்றும் காச்சம்க்குறிச்சி ஆகிய பெருமாள் கோவில்களில் விஷேச பூஜைகள் நேற்று நடைபெற்றது. இங்குள்ள கோவில்கள் மூலவர் வாமணரூப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பாலக்காடு அருகேயுள்ள சித்தூர் பழயணூர் பகவதி கோவில்கள் பக்தர்கள் கூட்ட நெரிசல் அதிகளவில் காணப்பட்டது. இங்கு கோவில் கிழக்குக்கோபுர வாயிலின் முன்பாக சித்தூர் பகவதி அம்மன் உருவம் பொரித்த மெகா சைஸ் அத்தப்பூ கோலம் தேவஸ்தான மேம்பாட்டுக் குழுவினர் சார்பில் அமைக்கப்பட்டிருந்தன. இந்த பூக்கோலம் பக்தர்களின் மனதைப் பெரிதும் கவர்ந்தன.
பாலக்காடு மாவட்டத்தில் ஓணம் திருவிழா விடுமுறை நாட்களையொட்டி மலம்புழா, போத்துண்டி, நெல்லியாம்பதி, காஞ்ஞிரப்புழா, மங்கலம், திருத்தாலா பாப்புஜி ஆகிய இடங்களில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்திருந்தன. இந்த சுற்றுலா தலங்களில் மக்கள் குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.