வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்களை வீட்டில் பூட்டி வையுங்கள்: சர்ச்சை பேச்சால் ஒன்றிய அமைச்சர் மீது வழக்கு
பாட்னா: வாக்குப்பதிவு நாளன்று ஏழை வாக்காளர்களை வீட்டை விட்டு வெளியே வர விடக்கூடாது எனப் பேசிய ஒன்றிய அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பீகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, மொகாமா தொகுதியில் கடந்த 3ம் தேதி தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் வேட்பாளரும், சிறையில் இருப்பவருமான ஆனந்த் சிங்கிற்கு ஆதரவாக ஒன்றிய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லலன் சிங் பிரசாரம் செய்தார்.
அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவாளர்களிடையே பேசிய அவர்,
‘வாக்குப்பதிவு நாளன்று குறிப்பிட்ட சில எதிர்க்கட்சி நிர்வாகிகளையும், ஏழை வாக்காளர்களையும் வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கக் கூடாது. அவர்களை வீட்டிற்குள் பூட்டி வைக்க வேண்டும். அவர்கள் வாக்களிக்க விரும்பினால் மட்டுமே வெளியே அழைத்து வர வேண்டும்’ என்று அவர் பேசியது அதிர்வலைகளை உருவாக்கியது.
ஒன்றிய அமைச்சரின் இந்த சர்ச்சைப் பேச்சு அடங்கிய காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதைத் தொடர்ந்து, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி, வாக்காளர்களை மிரட்டும் வகையிலும், தேர்தல் ஆணையத்தை அவமதிக்கும் வகையிலும் லலன் சிங் பேசியதாக குற்றம் சாட்டியது. இந்த விவகாரம் தொடர்பாக பாட்னா மாவட்ட நிர்வாகம், தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் கண்காணிப்பு காணொலி காட்சிகளை ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, ஒன்றிய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.