ஆம்னி பஸ்சில் மயக்க பிஸ்கட் கொடுத்து மாணவி பலாத்காரம்: வீடியோ எடுத்து மிரட்டிய டிரைவர் கைது
மார்த்தாண்டம்: ஆம்னி பஸ்சில் கல்லூரி மாணவிக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து பலாத்காரம் செய்ததோடு, வீடியோ எடுத்து மிரட்டிய டிரைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தக்கலை பகுதியில் வசித்து வரும் விவசாயி ஒருவரின் 22 வயது மகள், கோவையில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் எம்எஸ்சி இறுதியாண்டு படித்து வருகிறார். கடந்த 4 மாதத்திற்கு முன் விவசாயியின் மனைவியும், மகளும் தக்கலையில் இருந்து கோவை கல்லூரிக்கு தனியார் ஆம்னி பஸ்சில் சென்றுள்ளனர்.
அந்த பஸ்சை களியக்காவிளை வேர்கிளம்பி பகுதியை சேர்ந்த அனீஷ் (36) ஓட்டி சென்றுள்ளார். அவருக்கு மனைவி, குழந்தைகள் உண்டு. பஸ்சில் பயணம் செய்த தாய், மகளிடம் அனீஷ் அன்பாக பேசி பழகி உள்ளார். எந்த உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேளுங்கள் என்று கூறி, பஸ்சை நிறுத்திய இடங்களில் எல்லாம் அவர்கள் கேட்ட உதவிகளை செய்து கொடுத்துள்ளார். மாணவி என் மகளை போன்றவர் என்று கூறியதோடு, அவரது தாயாரிடம் நீங்கள் அங்கும் இங்குமாக அலைய வேண்டாம். நானே கல்லூரிக்கு சென்று வர உதவி செய்கிறேன் என கூறியுள்ளார். இதனை நம்பி மாணவி ஒவ்வாரு முறையும் விடுப்பிற்கு வந்து விட்டு செல்லும் போதும், விடுப்பிற்கு வரும் போதும் அனீஷ் ஓட்டி செல்லும் ஆம்னி பஸ்சிலேயே பயணம் செய்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த 9ம் தேதி அனீஷ் ஒட்டிய பஸ்சில் வீட்டிற்கு வரும் போது ஸ்லீப்பர் பெட்டில் மாணவி தூங்கி கொண்டிருந்தார். அப்போது அனீஷ் மாணவியை தட்டி எழுப்பி, பசிக்குதுன்னா இந்த பிஸ்கட்டை சாப்பிடு என்று கொடுத்து உள்ளார். மறுநாள் காலையில் 2 பேருக்கும் எல்லாம் முடிந்து விட்டது என்று அனீஷ் கூறியுள்ளார். உடனே மாணவி அழுது கொண்டு தாயிடம் கூற போவதாக கூறி உள்ளார். உடனே அனீஷ் கத்தியை காட்டி மிரட்டி உன்னையும், குடும்பத்தில் உள்ளவர்களையும் கொன்று விடுவேன் எனவும் இரவு நடந்ததை வீடியோ எடுத்து வைத்து இருக்கிறேன், அதை வெளியிட்டு விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.
அதன் பிறகு பேசுவதற்கு என்று அழைத்து 2 நாட்கள் மாணவியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதை வீடியோ எடுத்து வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர் புகாரின்படி மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிந்து அனீஷை கைது செய்தனர்.