ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள்-அரசு இடையே பேச்சு முடிந்த சில நிமிடங்களில் கட்டணம் அதிரடியாக குறைப்பு
சென்னை: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள்-அரசு இடையே பேச்சு முடிந்த சில நிமிடங்களில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 20ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் தங்கி படிக்கும், வேலைக்கு செல்லும் வெளிமாநிலத்தவர்கள் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவார்கள். பேருந்து, ரயில்கள், விமானங்களில் செல்ல தயாராகி வருகின்றனர்.இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தீபாவளி பண்டிகைக்கு ரயிலில் முன்பதிவு கடந்த ஆகஸ்ட் 17ம்தேதி தொடங்கிய நிலையில் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகி விட்டது.
காத்திருப்போர் பட்டியல் அதிகமாக இருந்ததால் முன்பதிவையும் நிறுத்தி விட்டனர். அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களிலும் இடங்கள் நிரம்பிவிட்டன. இதனால், பலர் ‘தட்கல்’ டிக்கெட்டுகளுக்காக காத்திருக்கின்றனர். தீபாவளிக்கு ரயிலில் சொந்த ஊருக்கு செல்ல முடியாதவர்கள், அரசு பேருந்து மூலம் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல TNSTC இணையதளம் மற்றும் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 20 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு தொடர்ந்து நடைபெற்ற நிலையில், அதிலும் முன்பதிவுகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த சூழ்நிலையை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி 3 மடங்கிற்கும் மேல் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.
உதாரணமாக சென்னை - நெல்லைக்கு ரூ.1,700 வரை கட்டணம் இருந்த நிலையில் தீபாவளியை ஒட்டி ரூ.5,000 வரை கட்டணம் என புகார் எழுந்தது. எனவே, உடனடியாக தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளைக்கு முடிவுரை எழுத வேண்டும் என்பது பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ஆம்னி பேருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதுமட்டுமின்றி போக்குவரத்து ஆணையர் கஜலட்சுமி தலைமையில் இன்று ஆம்னி உரிமையாளர், சங்கத்தினருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது ஆம்னி பஸ்கள் விதிகளுக்கு உட்பட்டு இயங்க வேண்டும். தற்போது அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்துள்ளன. அரசு நிர்ணயித்த கட்டணத்தில் டிக்கெட் விற்பனை செய்ய வேண்டும் என்று கூறினார். இந்நிலையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள்-அரசு இடையே பேச்சு முடிந்த சில நிமிடங்களில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கோவை, திருச்சி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.3000 ரூபாய் வரை திருநெல்வேலிக்கு ஆம்னி பேருந்து கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மதுரை செல்ல ரூ4,000ஆக இருந்த ஆம்னி பேருந்து கட்டணம் ரூ.2,600ஆக குறைக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட கட்டண அட்டவணைப்படி வசூலிக்கப்படுகிறதா என கண்காணிக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.