ஓமலூர் ரயில்வே மேம்பாலத்தில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: குறுகலான வளைவால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக மக்கள் புகார்
சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் மேம்பாலத்தில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் கோட்டை மாரியம்மன் கோயில் பகுதியில் ரயில்வே மேம்பாலம் ஒன்று அமைந்துள்ளது. அந்த ரயில்வே மேம்பாலம் மிக வளைவாக அமைந்துள்ளதால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக பெங்களூரில் இருந்து கோவைக்கு பிஸ்கெட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஓமலூர் வழியாக வந்துகொண்டு இருந்தது.
அப்போது ஓமலூர் மேம்பாலம் பகுதியில் வளைவு பகுதிக்கு வந்தபோது திடீரென கண்டெய்னர் லாரி சாலையிலே தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்து காரணமாக அந்த ஓட்டுனர் லேசாக காயம் அடைந்தார், உடனடியாக அவரை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த நிலையில் அந்த லாரி கவிழ்ந்தது காரணமாக ஓமலூர் மேம்பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதாவது சேலத்தில் இருந்து மேட்டூர், மற்றும் தாரமங்கலம் செல்லும் வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மேட்டூரில் இருந்து செல்லக்கூடிய வாகனங்களும் அதேபோல சேலத்தில் இருந்து மேட்டூர் நோக்கி வரக்கூடிய வாகனங்களும் அப்படியே அணிவகுத்து நின்றன.
சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றனர். இதனையடுத்து போக்குவரத்து போலீசார் உடனடியாக வந்து 2 ராட்சத கிரேன்களை வரவழைத்து தலைகுப்புற கவிழ்ந்து இருந்த லாரியை நிமிர்த்தினர். இதனை தொடர்ந்து சாலை ஓரமாக அந்த லாரி நிறுத்தப்பட்டது. பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.