ஓமலூர் அருகே சினிமா பாணியில் சம்பவம் காரில் தப்பிய காதல் தம்பதியை துரத்தி சென்று சரமாரி தாக்குதல்
*தாலியை அறுத்து விட்டு புதுப்பெண் கடத்தல்
ஓமலூர் : ஓமலூர் அருகே, காதல் தம்பதி சென்ற காரை விரட்டிச் சென்ற பெண்ணின் உறவினர்கள், காதலன் மண்டையை உடைத்து விட்டு, புதுப்பெண்ணை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே சந்திரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன்(32). இவரது தந்தை ராமன் இறந்து விட்டார். கலைச்செல்வன் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே வடகம்பட்டியைச் சேர்ந்த முருகன் மகள் பிரியராகினி(23). இவர், தொப்பூரில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்று வரும்போது, கலைச்செல்வனுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது.
இருவரும் கடந்த 5 ஆண்டாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது காதலுக்கு பிரியராகினியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கடந்த 4ம் தேதி, காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி, கிருஷ்ணகிரியில் உள்ள முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இதனை அறிந்த பிரியராகினியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், காதல் ஜோடியை தேடி வந்தனர். இதையறிந்த காதல் ஜோடி, சேலம் மாவட்ட எஸ்.பி ஆபீசில் தஞ்சம் அடைவதற்காக காரில் புறப்பட்டனர். அப்போது, டோல்கேட்டில் வைத்து, அவர்களை பிடிப்பதற்காக சிலர் தயாராக உள்ளதாக தகவலறிந்து, ஓமலூர் கோட்ட கவுண்டம்பட்டி கிராம சாலை வழியாக கார் பறந்தது. ஆனால், அங்கே காரில் காத்திருந்த ஒரு கும்பல், காதல் ஜோடியை பார்த்ததும் விரட்டிச் சென்றனர்.
மண் சாலையில் சென்ற கார் நடுவழியில் நின்று விட்டதால், காரில் இறந்து கீழே இறங்கிய காதல் ஜோடி, காவாண்டப்பட்டி கிராமம் வழியாக ஓட்டம் பிடித்தனர். அவர்களை துரத்திச் சென்று மடக்கி பிடித்த கும்பல், சரமாரியாக தாக்கினர். இதில், கலைச்செல்வனின் மண்டை உடைந்தது. ஆனாலும் ஆத்திரம் தீராத அந்த கும்பல், காதல் ஜோடி வந்த புதிய காரை அடித்து நொறுக்கினர்.
இந்த தாக்குதலில் கலைச்செல்வன் மயங்கி சரிந்தார். பின்னர், பிரியராகினி கழுத்தில் இருந்த தாலியை அறுத்து எறிந்து கும்பல், அவரை கடத்திச் சென்றனர். அதனைக்கண்ட அப்பகுதி மக்கள் ஓடி வந்து, காயமடைந்த கலைச்செல்வனை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் தரப்பினர் அரசியல் பின்னணி கொண்டவர்கள் என்பதால், ஓமலூர் போலீசார் நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் ஓமலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.