ஓம் காளி, ஜெய் காளி கோஷத்துடன் குலசையில் இன்று நள்ளிரவு மகிஷா சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
தூத்துக்குடி: ஓம் காளி, ஜெய் காளி கோஷத்துடன் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் இன்று (வியாழன்) நள்ளிரவு நடக்கிறது. உலக புகழ் பெற்ற தசரா திருவிழா நடைபெறும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலில் 1ம் திருவிழா செப்டம்பர் 23ம்தேதி முதல் 9ம் திருவிழா அக்டோபர் 1ம்தேதி வரை தினசரி இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலம், கற்பக விருட்சம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் திருக்கோலம், ரிசபம் வாகனத்தில் பார்வதி திருக்கோலம், மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலம், காமதேனு வாகனத்தில் நவநீத கிருஷ்ணர் திருக்கோலம், சிம்ம வாகனத்தில் மகிசாசுரமர்த்தினி திருக்கோலம், பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலம், கமல வாகனத்தில் கஜலெட்சுமி திருக்கோலம், அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலம் என திருவீதியுலா நடந்தது.
10ம் திருவிழாவான இன்று 2ம்தேதி காலை 6 மணி, காலை 7.30 மணி, காலை 9 மணி, காலை 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 11 மணிக்கு அன்னை முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும் தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு அன்னை சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோயிலுக்கு முன்பாக எழுந்தருளி லட்சகணக்கான பக்தர்கள் முன்னிலையில், ஓம் காளி, ஜெய் காளி கோஷத்துடன் மகிஷா சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண குலசேகரன்பட்டினத்தில் குவிந்து வருகின்றனர்.