பயனுள்ள பொருளாக மாறும் ஆலிவ் பழக்கழிவுகள்!
நமது நாட்டில் கடலை, எள், வேப்பங்கொட்டை, ஆமணக்கு ஆகியவற்றில் இருந்து எண்ணெய் தயாரிக்கும்போது கழிவுகளாக கிடைக்கும் புண்ணாக்குகள் கால்நடைகளுக்கு தீவனமாகவும், நிலத்திற்கு உரமாகவும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் ஆலிவ் எண்ணெய் தயாரிப்பின்போது கிடைக்கும் கழிவுகள் சில தீங்குகளைக் கொண்டு வரும் பொருட்களாக உள்ளன. இந்தக் கழிவுகளையும் பயனுள்ளதாக மாற்றலாம் என உலகுக்கு வழிகாட்டி இருக்கிறது உலகின் முன்னணி ஆலிவ் எண்ணெய் உற்பத்தி நாடுகளில் ஒன்றான துனிசியா. துனிசியாவில் ஆண்டுக்கு லட்சக்கணக்கான டன் ஆலிவ் பழங்கள் எண்ணெய் தயாரிப்பிற்காக பயன்படுத்தப்படுகின்றன. எண்ணெய் தயாரிப்பிற்குப் பின் கிடைக்கும் ஆலிவ் பழங்களின் தோல், தசை, விதை போன்ற திடக்கழிவுகள் மற்றும் எண்ணெய் வடிகட்டும் கழிவுநீர் ஆகியவை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவையாக உள்ளன. இவற்றை வெறுமனே நீக்கம் செய்யாமல், பயனுள்ள பசுமை எரிபொருளாக மாற்றும் முயற்சிகள் பல இடங்களில் தொடங்கப்பட்டுள்ளன.அதன் ஒரு பகுதியாக, ஆலிவ் கழிவுகள் மூலம் உலர்ந்த எரிபொருள் கட்டிகள் (Pellets) தயாரிக்கப்படுகின்றன. மரத்தூளுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் இந்த எரிபொருள் கட்டிகள் வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் தீயை உருவாக்கும் ஒருவித எரிபொருளாக பயன்படுகின்றன. மேலும் கழிவுகள் அடைக்கப்பட்ட தொட்டிகளில் நுண்ணுயிரிகள் மூலம் மீத்தேன் வாயு போன்ற பயோகாஸ் உண்டாகி, சமையல் மற்றும் மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது.
அதேபோல வெப்பத்தின் மூலம் ஒரு பொருளை சிதைத்து அதை வேறொரு வடிவத்திற்கு மாற்றுவதை பைரோலிசிஸ் என்கிறோம். இந்த பைரோலிசிஸ் எனும் உயர் வெப்ப சிகிச்சை முறையில் ஆலிவ் கழிவுகள் கரைக்கப்பட்டு, பயோ ஆயில் மற்றும் ஹைட்ரஜன், கார்பன் மோனாக்சைடு ஆகிய இரண்டு வாயுக்களின் கலவையாக மாற்றப்பட்டு உயர் தர எரிபொருளாக தயாரிக்கப்படுகின்றன. இவை இயற்கை எரிபொருட்களுக்கு மாற்றாக துனிசியாவில் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளன.துனிசியாவின் சில பகுதிகளில் இந்த முயற்சிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. பல சர்வதேச உதவிகள் மற்றும் நிதி ஆதரவுகளும் இந்தத் திட்டத்திற்கு கிடைத்து வருகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் பசுமை வளர்ச்சிக்கும் வழிகாட்டியாக இருக்கும் இந்தத் திட்டம், உலகம் முழுவதும் உள்ள ஆலிவ் உற்பத்தியாளர்களுக்கான முன்னோடி முயற்சியாக பார்க்கப்படுகிறது. இந்தியாவிலும் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக விவசாய, சுற்றுச்சூழல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். அவ்வாறு இந்தத் திட்டம் இந்தியாவில் செயல்படத் தொடங்கினால் விவசாயத்திலும், எரிபொருள் பயன்பாட்டிலும் கவனிக்கத்தக்க மாற்றங்கள் நிகழும் எனவும் தெரிவிக்கிறார்கள்.