மரக்காணம் அருகே இன்று அதிகாலை கனமழையால் வீடு இடிந்து விழுந்து மூதாட்டி பலி
மரக்காணம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலத்தூர் செட்டியார் தெருவை சேர்ந்தவர் பச்சையம்மாள் (65). இவர், அவரது பழைய ஓடு போட்ட வீட்டில் தனியாக வசித்து வந்தார். இன்று அதிகாலை ெபய்த பலத்த கன மழையால் அவரது வீடு மற்றும் அவரது வீட்டின் அருகில் இருந்த சம்பந்தம் ஆகியோரின் வீடுகள் திடீரென இடிந்து விழுந்தது. இதில் மூதாட்டி பச்சையம்மாள், இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மரக்காணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.
தகவலறிந்து மரக்காணம் வட்டாட்சியர் நீலவேணி, மரக்காணம் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் இறந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.