ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோயில்கள், புனித தலங்களை சுற்றுலா தலமாக்க வேண்டும்
*சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
திருவாடானை : திருவாடானை பகுதியிலுள்ள ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோயில்கள், புனிதத் தலங்களைச் சுற்றுலாத் தலங்களாக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொன்மைச் சிறப்பும் வரலாற்றுப் பெருமையும் கொண்ட பகுதியாகத் திருவாடானை தாலுகா விளங்குகிறது.
இங்குள்ள ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கடந்த பழமை வாய்ந்த கோயில்களும், பல்வேறு மதங்களைச் சார்ந்த புனிதத் தலங்களும் இந்தப் பகுதிக்கு வரலாற்று முக்கியத்துவத்தைக் கொடுக்கின்றன. இந்த பாரம்பரியச் சின்னங்களுக்கு ஆதாரமாகப் பல கல்வெட்டுக்கள் இங்கு நிறைந்திருப்பது இதன் தொன்மையை உறுதிப்படுத்துகின்றது.
இந்த பழமையான மற்றும் புனிதமான ஸ்தலங்களை ஒருங்கிணைத்துச் சுற்றுலாத்தலமாக அறிவித்து மேம்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கை இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும், சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவாடானையில் அமைந்துள்ள ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலமாகும்.
ஒன்பது நிலைகளைக் கொண்ட பிரமாண்டமான ராஜகோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சியளிக்கும் இக்கோயில், பாண்டிய ஸ்தலம் 14ல் எட்டாவது சிவ தலமாகப் போற்றப்படுகிறது. இந்த சிவன் கோயில் அதன் சிற்பக் கலையாலும், வழிபாட்டுச் சிறப்பாலும் தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளது.
இதேபோன்று, திருவாடானைக்கு அருகிலேயே உள்ள திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் சமேத வல்மீக நாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலின் மிகச் சிறப்பான அம்சம் என்னவென்றால், இங்கு மதங்களைக் கடந்து பக்தர்கள் வந்து நேர்த்திக் கடன் வைத்து வழிபடுகின்றனர். கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் எனப் பல மதத்தைச் சேர்ந்தவர்களும் இங்கு வந்து தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துவதும், இறைவனைத் தரிசிப்பதும் இதன் தனிச் சிறப்பாகும்.
தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யும் இக்கோயிலில், குறிப்பாகச் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.
சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் மேலும் சில புனிதத் தலங்களும் இப்பகுதியில் உள்ளன. திருவாடானை அருகில் உள்ள ஓரியூரில், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்தவ மதபோதகராக இருந்து, ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் உத்தரவின் பேரில் தலை வெட்டப்பட்டு உயிர் தியாகம் செய்த புனித அருளானந்தரின் திருத்தலம் அமைந்துள்ளது.
இது கிறிஸ்தவ சமூகத்தினரால் முக்கியமான புனித யாத்திரை ஸ்தலமாகக் கருதப்படுகிறது. இந்தத் திருத்தலத்திலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில், பல நூற்றாண்டுகளைக் கடந்த, அனைத்து மத மக்களாலும் வழிபடப்படும் இஸ்லாமியர்களின் முக்கிய ஸ்தலமான சர்தார் நெய்னா முகமது தர்கா, பாசிபட்டினத்தில் அமைந்துள்ளது.
இத்தர்காவின் கந்தூரி விழாவில் இன்றளவும் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் பங்களிப்பு தொடர்ந்து வருவது, இப்பகுதியின் பன்முகப் பாரம்பரியத்தையும், மத நல்லிணக்கத்தையும் பறைசாற்றுகிறது.
தற்போது, ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வரும் பயணிகள் இப்பகுதியின் தொன்மை மற்றும் பெருமைகள் குறித்துத் தாங்கள் செவி வழியே கேள்விப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தனிப்பட்ட முறையில் இந்தச் புனித ஸ்தலங்களுக்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இந்த தனிப்பட்ட வருகையாளர்கள் தவிர, முறையாக அரசு அறிவித்து மேம்படுத்தினால், உலகெங்கிலும் உள்ள ஆன்மீக மற்றும் வரலாற்று ஆர்வலர்களை ஈர்க்க முடியும்.
எனவே, தமிழக அரசு இந்த பழைமை வாய்ந்த கோயில்களையும், வரலாற்றுச் சிறப்பு மிக்கப் புனிதத் தலங்களையும் ஒருங்கிணைத்து, அவற்றின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் முறையாகச் சுற்றுலாத்தலங்களாக அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் கோரிக்கை விடுக்கின்றனர்.
அரசு ஒரு சிறப்பு நிதியை ஒதுக்கி, இந்தச் சுற்றுலாத்தலங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான சாலைகள், தங்குமிடங்கள், குடிநீர் வசதி போன்றவற்றை மேம்படுத்தினால், இதன் மூலம் இப்பகுதியின் வளர்ச்சி அதிகரித்து, பொருளாதாரம் மேம்படும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும், இப்பகுதி வர்த்தகர்களும், பொதுமக்களும் உறுதியாக நம்பி, அரசின் கவனத்தை ஈர்க்கின்றனர்.