எண்ணெய் தொழிற்சாலையில் 10 பேரல் பாமாயில் திருடிய லாரி டிரைவர் பிடிபட்டார்: கூட்டாளிகளும் சிக்கினர்
சென்னை: பெரியபாளையம் அடுத்த ஜெயபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கப்பல் மூலம் டன் கணக்கில் எண்ணெய் கொள்முதல் செய்யப்பட்டு, ராயபுரத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து லாரிகள் மூலம் ஜெயபுரத்திலுள்ள தொழிற்சாலைக்கு அனுப்பப்படும்.
இங்கு, எண்ணெய் பேக்கிங் செய்யப்பட்டு பிறகு பல மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. இந்நிலையில், இந்நிறுவனத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வரும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சசிகுமார் (45) என்பவர், கடந்த 3ம் தேதி அதிகாலை ராயபுரத்தில் இருந்து 4500 லிட்டர் பாமாயிலை டேங்கர் லாரியில் ஏற்றிக்கொண்டு ஜெயபுரத்தில் உள்ள எண்ணெய் தொழிற்சாலைக்கு சென்று பாமாயிலை இறக்கியுள்ளார்.
ஆனால், அன்றைய தேதியில் இருந்து சசிகுமார் பணிக்கு செல்லாமல் தலைமறைவாகியுள்ளார். இதனிடையே, தொழிற்சாலை பணியாளர்கள் லாரி டேங்கில் இருந்த பாமாயிலை சரிபார்த்தபோது பாமாயிலுடன் தண்ணீர் கலந்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பாதியளவு தண்ணீர் கலந்து இருப்பதை உறுதிப்படுத்தினர். இதுகுறித்து, பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, ராயபுரத்தில் இருந்து லாரியை தொழிற்சாலைக்கு எடுத்து சென்றபோது, திருவொற்றியூர் பகுதியில் உள்ள கிடங்கில் பாமாயிலை திருடி விட்டு அதற்கு பதில் தண்ணீர் நிரப்பியது தெரியவந்தது. இதையடுத்து, 10 பேரல்களில் நிரப்பி வைத்திருந்த பாமாயிலை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பாமாயில் திருடிய லாரி டிரைவர் சசிகுமார், இவருக்கு உதவியாக இருந்த காலடிப்பேட்டையை சேர்ந்த சங்கர நாராயணன் (42), ராஜ்குமார் (52) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.