எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் மின்னல் தாக்கி ராட்சத டேங்கர் தீப்பிடித்து எரிந்தது
திருமலை: எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் மின்னல் தாக்கி ராட்சத டேங்கர் தீப்பிடித்து எரிந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கிழக்கு இந்திய பெட்ரோல் கம்பெனிக்கு (இ.ஐ.பி.எல்.) சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. நேற்று அப்பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது, தொழிற்சாலையில் உள்ள ராட்சத எண்ணெய் டேங்கர் மீது மின்னல் தாக்கியுள்ளது. இதனால் டேங்கர் தீப்பிடித்து எரிந்தது.
இதையடுத்து தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் தீ விபத்து சைரன் ஒலிக்கப்பட்டது. உடனே, அப்பகுதியில் இருந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் போராடி தண்ணீர் மற்றும் கெமிக்கல் நுரையை பயன்படுத்தி தீயை அணைத்தனர். உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
விபத்து குறித்து அறிந்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில் தீ விபத்து காரணமாக ராட்சத எண்ணெய் டேங்கர் சேதமாகியுள்ளது. அதன் சேத மதிப்பீடு குறித்து தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.