திருபுவனையில் ஜேசிஎம் சார்பில் நடந்த கால்வாய் தூர்வாரும் பணியை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
திருபுவனை : திருபுவனை தொகுதிக்கு உட்பட்ட திருபுவனை பாளையம், மதகடிப்பட்டுபாளையம் ஆகிய பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஏரி கால்வாய் உள்ளது. அந்த கால்வாயில் செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக, கால்வாயில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் திருபுவனை தொகுதி அங்காளன் எம்எல்ஏவிடம் வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, அங்காளன் எம்எல்ஏ மற்றும் ஜேசிஎம் மக்கள் மன்றத்தின் சார்பில் ஜேசிபி இயந்திரம் மூலம் நேற்று கால்வாய் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து கால்வாய் பகுதியில் இருந்த அனைத்து செடிகள், கொடிகள் மற்றும் புதர்களை அகற்றி வந்த நிலையில், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தின் அனுமதி இன்றி திருபுவனைபாளையத்தில் நடந்த கால்வாய் தூர்வாரும் பணியை தடுத்து நிறுத்தினர். இதனால் கால்வாய் தூர்வாரும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
அப்போது, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் தூர்வாரும் பணியை ஏன்? தடுக்கிறீர்கள் என்று வாக்குவாதம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்கள் வாய்க்கால் தூர்வாரும் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்து, போலீசார் தொலைபேசி மூலம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது, கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் தூர்வாரும் பணியை விரைவில் தொடங்க உள்ளோம் என்று ஆணையர் எழில்ராஜன் கூறினார். இதனையேற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.