அதிகாரியை தாக்கிய விசிக கவுன்சிலர் கைது
புவனகிரி: கடலூர் மாவட்டம், புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக ராதாகிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை பணியில் இருந்தபோது, அங்கு வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புவனகிரி பேரூராட்சி 1வது வார்டு கவுன்சிலர் பாரதிதாசன் என்கிற காளிமுத்து, தனது வார்டில் செய்யப்பட்ட பணிக்கு கோப்புகள் தயார் செய்யும்படி கூறியுள்ளார்.
அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட கவுன்சிலர் பாரதிதாசன், இளநிலை உதவியாளர் ராதாகிருஷ்ணனை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து முகத்தில் கையால் குத்தி தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த ராதாகிருஷ்ணன், சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து இளநிலை உதவியாளர் ராதாகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில் புவனகிரி போலீசார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலரான பாரதிதாசன் என்கிற காளிமுத்து மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து நேற்று காலை அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.