செட்டிகுளம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் ஒழிப்பு துறை சோதனை: ரூ.33 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்
பாடாலூர்: தமிழ்நாடு முழுவதும் தீபாவளியையொட்டி அரசு அலுவலகங்களில் லஞ்சம் ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக அரியலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார் பதிவாளர்கள் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதையொட்டி இன்று பெரம்பலூரில் லஞ்சம் ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. தீபாவளியை முன்னிட்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். லஞ்சம் ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஹேமசித்ரா, இன்ஸ்பெக்டர் சரவணன் உள்பட 6 பேர் கொண்ட போலீஸார் மாலை 3.45 மணிக்கு சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
சுமார் 5 மணி நேரம் நடந்த இந்த சோதனை இரவு 9.00 மணிக்கு நிறைவடைந்தது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.33 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. வேறு எதுவும் சிக்கவில்லை. அந்த பணத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அடுத்த கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.