ஒடுகத்தூர் அருகே கரடிகுடியில் கண்டெடுக்கப்பட்ட முருகர் சிலையை தொல்லியல் துறை அதிகாரிகள் தோண்டி ஆய்வு
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த கரடிகுடி ஊராட்சிக்கு உட்பட்ட தாங்கல் பகுதியில் கடந்த 17ம் தேதி ஆடி மாதம் முதல் நாளில் அங்குள்ள மலை குன்றின் மீதுள்ள பாறைகளுக்கு இடையே முருகர் கற்சிலை இருப்பதாக சுவாமி அருள் வந்த ஒருவர் கூறியதன் பேரில் அப்பகுதி மக்களுடன் அங்கு சென்று கற்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
இதுதொடர்பான வீடியோ முக நூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளத்தில் 4 நாட்களில் வேகமாக பரவி பொதுமக்கள், பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வந்தனர்.
சிலை கண்டெடுக்கப்பட்ட 4 நாட்களில் பெரிய அளவில் பேசப்பட்ட முருகர் கற்சிலையை நேற்று வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் வேலூர் தொல்லியல் துறை அதிகாரிகள் அதனை கைகளாலியே தோண்டி ஆய்வு செய்தனர்.
அப்போது, அதில் இருக்கும் சிலையை அளவீடு செய்ததில் 2 அடி உயரம் 1 அடி அகலம் உடைய கற்சிலை எனவும், மயில் மீது அமர்ந்துள்ள முருகர் சிலை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மலை குன்றின் மீது கண்டெடுக்கப்பட்ட முருகர் கற்சிலை பழமையானதா? அல்லது புதிய சிலையா? என்ற முழு விவரம் ஆய்வகத்திற்கு சிலையை எடுத்து சென்றால் தெரியும்.
இப்போதைக்கு, சிலையை இங்கிருந்து எடுத்து செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆய்வுகள் முடிந்து சிலையை நிலத்தின் உரிமையாளரிடம் ஒப்படைப்பதா? இல்லையா? என்பது குறித்து கலெக்டரின் ஆலோசனைக்கு பிறகே தெரிய வரும்.
தற்போதைக்கு, சிலையை நாங்கள் எடுத்து செல்லவில்லை’ என்றனர். அப்போது, தாசில்தார் வேண்டா, ஊராட்சி மன்ற தலைவர் கிரிதரன், வருவாய் துறையினர், தொல்லியல் துறையினர் மற்றும் கிராம மக்கள் இருந்தனர்.