ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை அறுவடைக்கு தயாரான 100 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்
*அதிகாரிகள் கணக்கெடுக்க விவசாயிகள் கோரிக்கை
ஒடுகத்தூர் : ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் 3 நாட்களாக பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 100க்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சேதமானது. இதனால் அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி, இழப்பீடு வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் குளம், குட்டை, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது. ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒடுகத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் விவசாயிகள் நெல் மற்றும் நிலக்கடலை பயிரிட்டுள்ளனர். தற்போது இவை அறுவடைக்கு தயாராக உள்ளது. ஆனால் 3 நாட்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக நெல், நிலக்கடலை பயிர்களில் அதிகளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது.
மேலும் நெற்கதிர்கள் நிலத்தில் சாய்ந்து சேதமாகியுள்ளது. இதனால் நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதேநிலை நீடித்தால் நிலத்திலேயே நெற்பயிர்கள் முளைப்பு விடும் நிலை ஏற்படும். இதேபோல் தண்ணீர் தேங்குவதால் வேர்க்கடலை அறுவடையும் பாதித்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘ஆண்டுதோறும் பருவத்திற்கு ஏற்றார்போல் பயிர் செய்து வருகிறோம். இந்த முறை ஒடுகத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் நெற்பயிர்கள் அதிகளவு பயிரிட்டுள்ளனர்.
அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், நிலத்தில் மழைநீர் தேங்கியதால் பயிர்கள் சேதமாகியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் சேதமான பயிருக்கு கணக்கெடுப்பு மேற்கொண்டு இழப்பீடு வழங்கவேண்டும்’ என்றனர்.