ஒடிசா, பஞ்சாப், ஆந்திராவில் 4 செமிகண்டக்டர் சிப் ஆலைகளுக்கு அனுமதி: ஒன்றிய அமைச்சரவை முடிவு
புதுடெல்லி: ஒடிசா, பஞ்சாப், ஆந்திராவில் ரூ.4,594 கோடி முதலீட்டில் 4 செமிகண்டக்டர் சிப் உற்பத்தி ஆலைகளுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், ஒடிசா, பஞ்சாப், ஆந்திராவில் ரூ.4,594 கோடி முதலீட்டில் செமிகண்டக்டர் சிப் தயாரிக்கும் 4 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது குறித்து கூட்டத்திற்கு பின் பேட்டி அளித்த ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘‘ஒடிசா, பஞ்சாப், ஆந்திராவில் அமைக்கப்படும் 4 செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.76 ஆயிரம் கோடி மதிப்பிலான அரசின் செமிகண்டக்டர் நிதி உதவி திட்டத்தின் கீழ் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.
மின்னணு சாதனங்களின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் செமிகண்டக்டர் எனும் மூலப்பொருளை உள்நாட்டிலேயே தயாரிக்க ஒன்றிய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. மேலும், உத்தரப்பிரதேசத்தில் லக்னோ மெட்ரோ ரயில் திட்டத்தின் 11.165 கி.மீ தொலைவிலான 1பி கட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் திட்டமதிப்பீடு ரூ.5,801 கோடி. இதே போல அருணாச்சல பிரதேசத்தில் ஷி யோமி மாவட்டத்தில் ரூ.8,146.21 கோடி செலவில் 700 மெகாவாட் மின் உற்பத்திக்கான டாடோ-2 நீர் மின் நிலையம் கட்ட அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.