ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ரூ.8,308 கோடியில் 6 வழிச்சாலை அமைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்!
ஒடிசா: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ரூ.8,308 கோடியில் 6 வழிச் சாலை அமைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. 110.9 கி.மீ. நீளத்தில் முக்கிய நகரங்கள், துறைமுகங்களை இணைக்கும் வகையில் சாலை அமைக்கப்பட உள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் புறவழிச் சாலையில் ராமேஸ்வர் முதல் தாங்கி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 110.87 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆறு வழிச் சாலை அமைக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலதனச் செலவு மொத்தம் ரூ.8307.74 கோடி ஆகும்.
இந்த ஆறு வழிச்சாலை மிகவும் நகரமயமாக்கப்பட்ட கோர்தா, புவனேஸ்வர், கட்டாக் வழியாக அமைக்கப்படும். இந்த திட்டம் நிறைவேறும் போது ஒடிசாவுக்கும் இதர கிழக்குப் பகுதி மாநிலங்களுக்கும் குறிப்பிடத்தக்க பயனளிப்பதாக இருக்கும். அதிகப்படியான வர்த்தகப் போக்குவரத்தை மாற்றியமைப்பதன் மூலம் சரக்குகள் விரைவாக உரிய இடத்திற்கு சென்று சேர்வதற்கு பயன்படும் என்பதோடு போக்குவரத்து செலவைக் குறைக்கும் இந்த பிராந்தியத்தில் சமூக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
இந்த புறவழிச்சாலை பணிகள் நிறைவடையும்போது முக்கியமான சமயத் தலங்களுக்கு இடையே போக்குவரத்து தொடர்பு வலுப்படுவதோடு பொருளாதார மையங்களோடும் இணைப்பு ஏற்படும். வர்த்தகம் மற்றும் தொழில்துறை மேம்பாட்டிற்கு புதிய வழிகள் திறக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் நேரடியாக 74.43 லட்சம் மனித வேலை நாட்களும் மறைமுகமாக 93.04 லட்சம் மனித வேலை நாட்களும் உருவாகும்.