ஓடிஐ தொடர் இன்று துவக்கம் ஆட்டி படைக்குமா ஆஸியை இந்தியா? கில் தலைமையில் ரோகித், கோஹ்லி
பெர்த்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் இன்று துவங்குகிறது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. முதல் போட்டி பெர்த் நகரில் இன்று துவங்குகிறது. பல மாதங்களுக்கு பின்னர் இந்திய அணியில் ஜாம்பவான் வீரர்களும் முன்னாள் கேப்டன்களுமான விராட் கோஹ்லி, ரோகித் சர்மா ஒரு நாள் அணியில் ஆடுகின்றனர்.
இதனால் இந்திய அணி மேலும் வலுப்பெற்று காணப்படுகிறது. இதுவரை கேப்டனாக பொறுப்பேற்று வந்த ரோகித் சர்மா, ஆஸியுடனான தொடரில் மூத்த வீரராக மட்டும் பங்கேற்பதால் மனதளவில் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார். ஆஸி தரப்பில் மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசல்வுட் ஆகியோர், ரோகித், கோஹ்லியை கட்டுப்படுத்த தீவிரம் காட்டுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய கேப்டன் சுப்மன் கில், வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் தனது திறமையை வௌிப்படுத்தி பாராட்டுகளை பெற்றுள்ளார்.
ஆஸி போட்டிகளிலும் அதைத் தொடர்வார் எனக் கூறப்படுகிறது. இன்றைய போட்டியில், இந்திய அணியின் துவக்க வீரர்களாக ரோகித், கில் தொடர்வார்கள் எனத் தெரிகிறது. கோஹ்லி, 3வது வீரராகவும், அவரைத் தொடர்ந்து, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்து வீச்சில் முகம்மது சிராஜ், அர்ஷ்தீப் சிங், சுழலில் அக்சர் படேல், குல்தீப் யாதவ் இந்திய அணிக்கு பெரிய பலம்.
* இந்தியா: சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), அக்சர் படேல், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா, முகம்மது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜுரெல், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
* ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), ஸேவியர் பார்ட்லெட், கூப்பர் கனோலி, பென் துவார்சுயிஸ், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், மேத்யூ குனெமான், மார்னஸ் லபுஷனே, மிட்செல் ஓவன், ஜோஷ் பிலிப், மேத்யூ ரென்ஷா, மேத்யூ ஷார்ட், மிட்செல் ஸ்டார்க்.