தெ. ஆ.வுடன் 3வது ஓடிஐ ஆஸி இமாலய வெற்றி: 3 வீரர்கள் அதிரடி சதம்
மேக்கே: தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் நேற்று, ஆஸ்திரேலியா அணி, 276 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சென்று 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. முதல் இரு போட்டிகளில் தெ.ஆ. வென்ற நிலையில், 3வது ஒரு நாள் போட்டி, மேக்கே நகரில் நேற்று நடந்தது.
முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் 142 ரன், கேப்டன் மிட்செல் மார்ஷ் 100 ரன் குவித்து முதல் விக்கெட்டுக்கு 250 ரன் சேர்த்தனர். பின் வந்த கேமரூன் கிரீன் 55 பந்துகளில் 118 ரன், அலெக்ஸ் கேரி 50 ரன் ஆட்டமிழக்காமல் எடுத்தனர். அதனால், 50 ஓவரில் ஆஸி, 2 விக்கெட் இழப்புக்கு 431 ரன் விளாசியது.
கடின இலக்கை நோக்கி இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்கா வீரர்கள், ஆஸி பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சரிந்தனர். 24.5 ஓவரில் தெ.ஆ. 155 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதனால், ஆஸி, 276 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. ஆஸியின் கூப்பர் கனோலி 22 ரன் மட்டுமே தந்து 5 விக்கெட் சாய்த்தார். 3வது போட்டியில் தோற்றபோதும், 2-1 என்ற கணக்கில் தெ.ஆ. தொடரை கைப்பற்றியது.