ஓடிஐயில் 52வது மிரட்டல் 100
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் அதிரடியாக ஆடிய கிங் கோஹ்லி, 102 பந்துகளில், தனது 52வது சதத்தை விளாசினார். இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட் உலகில் ஏதாவது ஒரு வகை போட்டியில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை நெடுங்காலமாக வகித்து வந்த சச்சின் டெண்டுல்கரை, விராட் கோஹ்லி தற்போது முந்தியுள்ளார். அதிகபட்சமாக டெஸ்ட் போட்டிகளில் சச்சின் 51 சதங்கள் எடுத்து, ஏதாவது ஒரு வகை போட்டியில் அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக இருந்து வந்தார்.
அந்த சாதனையை, விராட் கோஹ்லி, 306 ஒரு நாள் போட்டிகளில், 294 இன்னிங்ஸ்கள் மட்டுமே ஆடி 52வது சதத்தை வெளுத்து முறியடித்துள்ளார். தவிர, டெஸ்ட் போட்டிகளில் 30 சதங்களும், டி20 போட்டிகளில் ஒரு சதமும் விராட் விளாசியுள்ளார். ஒட்டு மொத்தமாக, விராட் விளாசிய சதங்களின் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது. சச்சின், ஒரு நாள் போட்டிகளில் (452 இன்னிங்ஸ்களில்) 49 சதங்கள் மட்டுமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.