அக். 14ம் தேதி சட்டப்பேரவை கூட்டம்: சபாநாயகர் மு.அப்பாவு அறிவிப்பு
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் அக்டோபர் 14ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் ஜனவரி 6ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆனால், இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது உரையை வாசிக்காமல் சென்றுவிட்டார். தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 4 நாட்கள் நடந்தது. அதன்பிறகு, மார்ச் 14ம் தேதி சட்டப்பேரவையில் 2025-26ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
அடுத்த நாள் (மார்ச் 15) வேளாண் பட்ஜெட் தாக்கலானது. அதனை தொடர்ந்து, மார்ச் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை இரு பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் நடந்தது. பின்னர், மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 29ம் தேதி வரை துறை வாரியாக மானியக்கோரிக்கை விவாதம் நடந்தது. மொத்தம் 55 துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடந்து முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், 6 மாத கால இடைவெளியில் சட்டப்பேரவை மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில், தமிழக சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் அக்டோபர் 14ம் தேதி கூடுகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் மு.அப்பாவு நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை தலைவர் அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டமன்றத்தின் அடுத்த கூட்டத்தை வருகிற அக்டோபர் 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு தலைமை செயலக வளாகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் கூட்டியுள்ளேன். அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு சபை கூடியதும், சபை ஒத்திவைக்கப்பட்ட நாள் முதல் இதுவரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுற்ற நிகழ்வுகள் குறித்து இரங்கல் தெரிவிக்கப்படும். மேலும், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி மறைவு குறித்தும், சில முக்கிய பிரமுகர்கள் மறைவு குறித்தும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
தொடர்ந்து 2025-26ம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் சட்டப்பேரவையில் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். அக்டோபர் மாதம் 14ம் தேதிக்கு முன்னர் ஒரு தேதி குறிப்பிட்டு அந்த தேதியில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்று, எத்தனை நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்பது முடிவு செய்யப்படும். இந்தியாவிலேயே அரசியல் செய்யக்கூடிய ஒரே தலைவர் அப்பாவுதான் என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளாரே? அரசியலில் இருந்து, ஓட்டு வாங்கி, எம்எல்ஏவாகித்தான் சபாநாயகர் ஆகியிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தொடர் 4 நாள் (செவ்வாய் முதல் வெள்ளி வரை) நடைபெற வாய்ப்புள்ளது. அக்டோபர் 14ம் தேதி முதல் தொடங்கும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள், மசோதாக்கள் நிறைவேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும், தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026ம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் நடைபெற வாய்ப்புள்ளது. அதன்படி, தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ளதால், இந்த கூட்டத்தொடரில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
* 2025-26ம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் சட்டமன்றத்தில் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.
* அக்டோபர் மாதம் 14ம் தேதிக்கு முன்னர் ஒரு தேதி குறிப்பிட்டு அந்த தேதியில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்று, எத்தனை நாட்கள் சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என்பது முடிவு செய்யப்படும்.