மஹாளய அமாவாசை முன்னிட்டு முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
திருச்சுழி : மஹாளய அம்மாவாசை முன்னிட்டு திருச்சுழி குண்டாற்றில் ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்ககு தர்ப்பணம் செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள ஸ்ரீ திருமேனிநாதர் துணை மாலை அம்மன் கோயிலில் புரட்டாசி மஹாளயா அமாவாசையை முன்னிட்டு காலை முதலே ஏராளமான பக்தர்கள் குண்டாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுத்தனர்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசையை முன்னிட்டு வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்சுழி குண்டாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சாமி தரிசனம் செய்து வழிபடுவது வழக்கம்.
முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய திருச்சுழியில் திருமேனிநாதராய் எழுந்தருளியுள்ள சிவபெருமான் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. ரமணமகரிஷி பிறந்த இடம் என்பதால் திருச்சுழி சுற்றுலா தலமாகவும் உள்ளது.
திருச்சுழி ஸ்தலமானது காசி, ராமேஸ்வரம் புண்ணிய ஸ்தலங்களுக்கு அடுத்தபடியாக ஒரு புண்ணிய ஸ்தலமாக உள்ளது. 14 பாண்டிய ஸ்தலங்களில் 10வது ஸ்தலமாகவும் திருச்சுழி உள்ளது. புரட்டாசி அமாவாசையான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்சுழி குண்டாற்றில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம், திதி கொடுத்தனர். இதனால் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
மேலும், குண்டாற்றில் முன்னோர்களுக்குத் திதி, தர்ப்பணம் கொடுத்த பின்னர், ஸ்ரீ திருமேனிநாதர் கோயிலில் வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி வைத்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் திருச்சுழி ஸ்ரீ துணை மாலை அம்மன் சமேத திருமேனிநாதர் ஆலயத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசையை முன்னிட்டு திருச்சுழி சமூக ஆர்வலர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதானத்தை விருதுநகர் மாவட்ட பதிவாளர் சசிகலா சிவக்குமார் தொடங்கி வைத்தார்.
இதில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் கனகராஜ் மற்றும் அருப்புக்கோட்டை ஓம் அருள் தரும் அகஸ்தியர் பெருமான் உழவாரப்பணிக்குழு தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். திருச்சுழி கோயிலில் அம்மாவாசை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.