கருவேல மரங்கள் அடர்ந்துள்ள மலட்டாறை தூர்வார வேண்டும்
*விவசாயிகள் வலியுறுத்தல்
சாயல்குடி : கடலாடி மலட்டாறு நீர்வரத்து வழித்தடத்தில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து தூர்ந்து போய் கிடப்பதால், புனரமைப்பு செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியாக கடலாடி தாலுகா பகுதி உள்ளது.
60 பஞ்சாயத்துகளில் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பல ஆண்டுகளாக விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சியில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. விவசாயத்தை மட்டுமே பிராதான தொழிலாக முழுமையாக செய்து வருகின்றனர்.
இறைவை விவசாயம் நடக்க கூடிய அளவிலான நிரந்தரமான நீர் ஆதாரங்கள் இருந்தும், அவை முறையான பராமரிப்பின்றி பாழடைந்து, தூர்ந்து போய் கிடக்கிறது. இதனால் மானாவாரி எனப்படும் பருவ மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்யப்படுகிறது. மாவட்டத்தில் இந்த ஒரு வட்டத்தில் அனைத்து பயிர்களும் விளையக் கூடிய மண் தன்மை உள்ளது.
இதனால் இங்கு சுமார் 1 லட்சம் ஏக்கரில் நெல் பிரதான பயிராகவும், மிளகாய், பருத்தி, சோளம் போன்ற சிறுதானிய வகை பயிர்கள், மல்லி போன்ற தோட்டப்பயிர்கள், நிலக்கடலை உள்ளிட்டவை பயிரிடப்படுகிறது.
ஆனால் மழை காலத்தில் போதிய தண்ணீரை சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்த வழியில்லாததால் ஆண்டு தோறும் விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர். மழைக் காலத்தில் விருதுநகர் மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலிருந்து பெருக்கெடுத்து ஓடி வரும் காட்டாறு வெள்ளம் சாயல்குடி அருகே உள்ள தரைக்குடி பகுதியில் கஞ்சம்பட்டி ஓடைக்கும்.
தேனி, மதுரை வைகையில் இருந்து வரும் வைகை உபரிநீர் பார்த்திபனூர் பரளைஆறு, அபிராமம் கிருதுமால் நதி, கமுதி குண்டாறு வழியாக வந்து கடலாடி பகுதியிலுள்ள மலட்டாற்றிற்கு வந்து சேரும். சுமார் 70 வருடங்களுக்கு முன்பு இதன் வழியே ஓடி வந்த தண்ணீரை கடலாடி ஒன்றியத்திலுள்ள 200க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள், விவசாயத்திற்காக பயன்படுத்தி வந்தனர்.
காலபோக்கில் பருவமழை குறைய தொடங்கியது. நீர் வரத்து தடைபட்டது. இதனால் மலட்டாற்றின் நீர் வழித்தடங்களை சீமைகருவேல மரங்கள் ஆக்கிரமித்து அடர்ந்து வளர்ந்துள்ளது.
மலட்டாற்றிலிருந்து கிராம பகுதிகளுக்கு பிரிந்து செல்லும் பிரிவு கால்வாய்களிலும் சீமை கருவேல மரம் வளர்ந்து, ஆறு, கால்வாய் தூர்ந்து போய் கிடக்கிறது. இதனால் கண்மாய், குளங்கள், பண்ணைக்குட்டைகள் நிரம்ப வழியில்லாமல் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாமல் வீணாக போகிறது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த ஆற்று பகுதிகளில் கிடாத்திருக்கை, ஆப்பனூர், மங்களம், கடலாடி, கே.கருங்குளம், கூரான்கோட்டை, எம்.கரிசல்குளம், மூக்கையூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளின் சார்பில் கிணறு மற்றும் போர்வெல் அமைக்கப்பட்டது.
இதன் மூலம் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால் அடர்ந்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரத்தால் நீர்ஆதாரங்களின் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, நீரின் தன்மை மாறி தூர்ந்து போய் நீர்ஆதாரங்கள் பயன்பாடின்றி கிடக்கிறது.
எனவே இந்தாண்டிற்கான பருவமழை துவங்கும் முன் மலட்டாறு நீர் வரத்து வழித்தடம் மற்றும் பிரிவு கால்வாய் வழித்தடங்களில் அடர்ந்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற வேண்டும்.
புதிய தரமான, உயரமான கரைகளை அமைக்க வேண்டும், உள்புறம் பாறை கற்களால் பாதுகாப்பு சுவர்கள் கட்ட வேண்டும். மலட்டாற்றில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளை விரைந்து முடித்து, வரும் காலங்களில் விவசாயத்திற்கு பயன்படுத்தக் கூடிய அளவில் தண்ணீரை சேமிக்க வழிவகை செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.