ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனுடன் சந்திப்பு எதிரொலி அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை
சென்னை: ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனுடன் சந்தித்ததன் எதிரொலியாக, அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக கட்சியில் உள்கட்சி மோதல் வெடித்தது. 2016-2021ம் ஆண்டு காலக்கட்டத்தில் அதிமுக ஆட்சியில் இருந்ததால், உள்கட்சி பூசல் பெரிய அளவில் வெளியே தெரியவில்லை. ஆனால், 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியை இழந்த நிலையில், அதிமுகவில் உள்கட்சி பூசல் பூதாகரமானது. முதலில், ஜெயலலிதாவின் நிழலாக இருந்த சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் வெளியேற்றப்பட்ட நிலையில், தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும் நீக்கப்பட்டார்.
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருந்துவரும் நிலையில், உள்கட்சி பூசல் இன்னும் குறையவில்லை. அக்கட்சியின் அமைப்பு செயலாளராகவும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராகவும் இருந்து வந்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய கோபிசெட்டிப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.செங்கோட்டையன் கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். காரணம், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்தித்த 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது.
அதனால், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்றால் அதிமுகவில் இருந்து பிரிந்துபோனவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கே.ஏ.செங்கோட்டையன் கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி கோரிக்கை வைத்தார். அதை நடைமுறைப்படுத்த 10 நாள் கெடு விதிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை விடுத்தார். கே.ஏ.செங்கோட்டையன் இந்த கருத்தை தனது ஆதரவாளர்கள் மத்தியில் கூறிய நிலையில், திண்டுக்கல்லில் அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதாவது, கே.ஏ.செங்கோட்டையன் மீது என்ன ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து விவாதித்தார்.
அவர் ஆலோசனை நடத்தி முடித்த சற்று நேரத்தில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து ஒரு அறிவிப்பு வெளிவந்தன. அதில், கே.ஏ.செங்கோட்டையன் அதிமுகவில் வகித்து வந்த அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக செப்டம்பர் 6ம் தேதி அறிவிக்கப்பட்டது. மேலும், கே.ஏ.செங்கோட்டையன் நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற அவரது ஆதரவாளர்களும் அதிரடியாக நீக்கப்பட்டனர்.
அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த கே.ஏ.செங்கோட்டையன், ”அதிமுக மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான் கட்சி ஒன்றிணைப்பு பற்றி பேசினேன். ஜனநாயக முறைப்படி, பொறுப்புகளில் இருந்து நீக்கும் முன்பு என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் என்னிடம் விளக்கம் கேட்காமலேயே எனது பதவியை பறித்துள்ளார்கள். என் மீதான நடவடிக்கைகளுக்கு காலம் பதில் சொல்லும்” என்று கூறியதுடன், பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என்ற கருத்தில் தான் உறுதியாக இருப்பதாக கூறினார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று முன்தினம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் ஒன்றாக இணைந்து, தேவர் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். பின்னர் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் அங்கு சசிகலாவையும் சந்தித்தனர். இதற்கிடையே, செங்கோட்டையன் மீது நடவடிக்கை பாயுமா? என எடப்பாடி பழனிசாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த எடப்பாடி, ‘‘அதிமுகவுக்கு யார் துரோகம் செய்தாலும் தலைமையின் கருத்தை முழுமையாக கடைபிடிக்காவிட்டால் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி நேற்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும் அவர்களுடன் ஒன்றிணைந்து, கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிற காரணத்தாலும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்சை சேர்ந்த கே.ஏ.செங்கோட்டையன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி தெரிவித்துள்ளார்.
* இன்று விளக்கம் செங்கோட்டையன் பேட்டி
திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கோபியில் இருந்து காரில் சென்று கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை கெட்டிசெவியூர் என்ற இடத்தில் நேற்று நிருபர்கள் சந்தித்து கட்சியை விட்டு நீக்கியது குறித்து கேட்டபோது, நாளை (இன்று) காலை 11 மணிக்கு கட்சியை விட்டு நீக்கப்பட்டது குறித்து செய்தியாளர் சந்திப்பின்போது விளக்கமாக பேசுகிறேன் என்று தெரிவித்தார்.
* அதிமுக எம்எல்ஏவாக செயல்பட முடியாது
கே.ஏ.செங்கோட்டையன் அதிமுக கட்சியில் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டதால், இனி அவர் அதிமுக எம்எல்ஏவாக தொடர முடியாது. சுயேட்சை எம்எல்ஏவாக நீடிப்பார். சட்டப்பேரவையில், இனி அவருக்கு தனி இடம் ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதன்படி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்எல்ஏக்கள் வரிசையில் செங்கோட்டையனுக்கு இடம் வழங்க வாய்ப்புள்ளது.
* மூத்த மாஜி அமைச்சர்களுடன் ஆலோசனைக்கு பிறகு நடவடிக்கை
சேலத்தில் முகாமிட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, நேற்று ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு சென்றார். அங்கு அவர், சேலம் புறநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அங்கிருந்து நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிற்கு வந்த அவரை, மாஜி அமைச்சர்களான வேலுமணி, கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் செங்கோட்டையனை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டம் 2மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது. இதையடுத்து செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆலோசனை கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
* கோபியில் இனிப்பு தந்து கொண்டாட்டம்
செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை அறிந்த கோபி நகர செயலாளர் பிரினியோ கணேஷ், கோபி மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபு தலைமையில் திரண்ட 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கோபி பேருந்து நிலையத்தில் நேற்று பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.