நியுசி. இமாலய வெற்றி: 2வது டெஸ்டிலும் படுதோல்வி: சொந்த மண்ணில் நொந்த ஜிம்பாப்வே
புலவயோ: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் நியுசிலாந்து அணி 359 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றுள்ளது. நியுசிலாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்று, 2 டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. ஏற்கனவே முடிந்த முதல் டெஸ்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் நியுசி அணி அபார வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், இந்த அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் கடந்த 7ம் தேதி துவங்கியது.
முதல் இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே அணி, 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின் முதல் இன்னிங்சை ஆடிய நியுசிலாந்து அணியின் துவக்க வீரர் டெவோன் கான்வே 153, அவுட்டாகாமல் ஹென்றி நிகோல்ஸ் 150, ரச்சின் ரவீந்திரா 165 ரன்களை குவித்ததால், அந்த அணி, 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 601 ரன்னுடன் டிக்ளேர் செய்தது. அதைத் தொடர்ந்து, நேற்று 3ம் நாள் ஆட்டம் நடந்தது.
477 ரன் இலக்குடன் 2ம் இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே அணி வீரர்கள், நியுசியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீட்டுக் கட்டாய் சரிந்தனர். குறிப்பாக, நியுசியின் மிதவேக பந்து வீச்சாளர் ஜகாரி ஃபோக்ஸ் அற்புதமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அவரது மந்திரப் பந்து வீச்சில் முதல் இன்னிங்சிலும் 4 விக்கெட்டுகள் வீழ்ந்தன. இறுதியில், 28.1 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்ட ஜிம்பாப்வே அணி, 117 ரன் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனால், 3ம் நாளிலேயே, 359 ரன் வித்தியாசத்தில் நியுசிலாந்து இமாலய வெற்றி பெற்றது.