கண்ணை உருட்டி முறைத்ததால் மூத்த செவிலியருக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு: பணியிட கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு
லண்டன்: பணியிடத்தில் கண்ணை உருட்டி அவமதிப்பதும் கொடுமைப்படுத்துதலே எனக் கூறி, பாதிக்கப்பட்ட பல் மருத்துவ செவிலியருக்கு நடுவர் மன்றம் 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது. பணியிடங்களில் சக ஊழியர்களால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் கொடுமைப்படுத்துதல் என்பது உலகெங்கிலும் பெரும் சிக்கலாக இருந்து வருகிறது. வார்த்தைகளால் திட்டுவது அல்லது உடல் ரீதியாகத் தாக்குவது மட்டுமல்லாமல், முகபாவனைகள் மற்றும் செய்கைகள் மூலமும் ஒருவரை அவமதிப்பது கொடுமையான குற்றமாகும்.
இதுபோன்ற செயல்களால் ஊழியர்களின் மனநலம் பாதிக்கப்பட்டு, பணிச்சூழல் நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறுகிறது. இந்தச் சிக்கல்களுக்கு சட்டரீதியான தீர்வுகள் கிடைப்பது அரிதாகவே இருந்து வந்த நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இங்கிலாந்தின் எடின்பரோ நகரில் உள்ள பல் மருத்துவமனை ஒன்றில், 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வந்த மூத்த செவிலியர் மவ்ரீன் ஹோவிசன் (64) என்பவர், தன்னுடன் பணியாற்றிய சக செவிலியர் ஜிஸ்னா இக்பால் என்பவர் தன்னைத் தொடர்ந்து கண்ணை உருட்டி முறைப்பதன் மூலமும், இழிவுபடுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாகப் பணியாளர் நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நடுவர் மன்றம், கண்ணை உருட்டுவது போன்ற செயல்களும் பணியிடக் கொடுமைதான் என்பதை ஏற்றுக்கொண்டு, பாதிக்கப்பட்டவருக்கு இந்திய மதிப்பில் சுமார் 30 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க குற்றம்சாட்டப்பட்ட ஜிஸ்னா இக்பாலுக்கு உத்தரவிட்டது. ஒருவரின் சிறிய முகபாவனைகள் கூட கொடுமையான பணிச்சூழலை உருவாக்கி, சட்ட விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதற்கு இந்தத் தீர்ப்பு முக்கியச் சான்றாக அமைந்துள்ளது.