நுங்கம்பாக்கம் கல்லூரி பாதைக்கு ‘ஜெய்சங்கர் சாலை’ என புதிய பெயர்: முதல்வர் திறந்து வைத்தார்
சென்னை: நுங்கம்பாக்கம் கல்லூரி பாதைக்கு ‘ஜெய்சங்கர் சாலை’ என புதிய பெயர் சூட்டப்பட்டு அதற்கான பெயர் பலகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மக்கள் கலைஞர் என்றும், தமிழ் சினிமாவின் ஜேம்ஸ்பாண்ட் என்றும் அழைக்கப்பட்ட நடிகர் ஜெய்சங்கர் 35 ஆண்டு காலத்திற்கு மேலாக தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்தார். கலைஞருடன் நெருங்கிய தொடர்புடைய அவர் பல்வேறு தொண்டு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதோடு, கலைமாமணி விருது பெற்ற பெருமைக்குரியவர்.
அவரது கலைச்சேவையை சிறப்பிக்கும் வகையில் அவர் வசித்து வந்த நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி பாதை ‘ஜெய்சங்கர் சாலை’ என்று பெயர் சூட்டப்பட்டு அதற்கான பெயர் பலகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அதேபோல், மயிலாப்பூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.சேகரின் தந்தை எஸ்.வி.வெங்கடராமன் விஜயா வாஹினி ஸ்டுடியோவில் லேப் உயரதிகாரியாக பணியாற்றினார்.
மேடை நாடகங்களில் பெண் வேடமிட்டு நடித்துள்ளதோடு, தமிழ்நாடு திரைப்பட கல்லூரிகளில் தற்காலிக பேராசிரியராக பணியாற்றியுள்ளார். தமிழ்நாட்டின் முதல் தொலைக்காட்சி தொடர் ‘வண்ணக்கோலங்கள்’ தயாரிப்பாளர் ஆவார். அரிமா சங்கத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்த அவர் கண்தானம், ரத்த தானம், குழந்தைகளுக்கு ஏற்படும் சர்க்கரை குறைபாடு பற்றி விழிப்புணர்வு குறும்படத்தை தயாரித்ததோடு, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார்.
அவரது சேவையை சிறப்பிக்கும் வகையில், அவர் வசித்த மந்தைவெளிப்பாக்கம் 5வது குறுக்கு தெருவிற்கு ‘எஸ்.வி.வெங்கடராமன் தெரு’ என்று பெயர் சூட்டப்பட்டு அதனையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.