எண்ணும் எழுத்தும் பயிற்சி அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்க அறிவுறுத்தல்
சென்னை: 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பாக அக்.7ம் தேதி முதல் நடைபெறவுள்ள பயிற்சி முகாமில் ஆசிரியர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் கடந்த 2022-23ம் கல்வியாண்டு முதல் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் அரசாணையின்படி 2025 முதல் 2027ம் ஆண்டு வரை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் நடப்புக்கல்வியாண்டில் (2025-26) 1முதல் 4ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும் பாடப்பொருள் சார்ந்து 2ம் பருவத்துக்கான ஒன்றிய அளவிலான பயிற்சியினை அக்.7ம் தேதி முதல் அக்.10ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பயிற்சிக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை ஏற்றவாறு குழுக்களாகப் பிரிந்து கருத்தாளர்கள், குழுக்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு பயிற்சி நாள்களை முடிவு செய்து, மேற்குறிப்பிட்ட தேதிக்குள் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்க வேண்டும். பயிற்சி நடைபெறும் நாளில் தொடக்க வகுப்புகளில் கல்வி சார்ந்த பணிகள் பாதிக்கப்படக் கூடாது. பயிற்சி நடைபெறும் நாளில் ஆசிரியர் இல்லாத நிலையில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் மாற்றுப் பணியில் ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும். ஒன்றிய அளவிலான இந்த பயிற்சியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்வதற்கு ஏதுவாக அவர்களை பணிவிடுப்பு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.