அணுசக்தி விவகாரம் ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடை விதித்த ஐநா: 3 நாடுகளின் தூதர்களை திரும்ப பெற்றது ஈரான்
துபாய்: தொடர்ந்து அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக கூறி பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பான ஸ்னாப்பேக் திட்ட செயல்முறைகளை கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி தொடங்கின. இந்த நடவடிக்கையின் மூலம் 30 நாள்களுக்குள் ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகள் அமலுக்கு வரும்.
இந்த சூழலில் நேற்று முன்தினம் நடந்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், ஈரான் மீது பொருளாதார தடை விதிப்பதா அல்லது நிரந்தரமாக தடைகளை நீக்குவதா என்பது குறித்த வரைவு தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இதில் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகள் ஈரான் மீதான பொருளாதார தடையை நீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்பட ஒன்பது நாடுகள் ஈரானுக்கு எதிராக வாக்களித்தன.
இரண்டு நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதனால் வரைவு தீர்மானம் தோல்வியடைந்த நிலையில், ஈரான் மீதான பொருளாதா தடைகளை மீண்டும் நடைமுறைப்படுத்துவதை ஆறு மாதங்களுக்கு தாமதப்படுத்த கோரி ரஷ்யா, சீனா நாடுகள் கொண்டு வந்த வரைவு தீர்மானத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்தது. அதன்படி ஸ்னாபேக் திட்ட செயல்முறையின்கீழ், ஈரான் மீதான பொருளாதார தடைகளை நேற்று முதல் மீண்டும் நடைமுறைக்கு வந்தன.
இந்த தடைகள் காரணமாக ஈரானின் வௌிநாட்டு சொத்துகள் முடக்கப்படும். ஈரானால் எந்தவொரு நாட்டுடனும் ஆயுத ஒப்பந்தங்களை செய்ய முடியாது. மேலும் ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகள் நடத்தினால் அதற்கு தண்டனை விதிக்கப்படும். இந்த சூழலில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்த தூதர்களை ஈரான் திரும்ப பெற்றது.
* எந்த பாதிப்பும் இல்லை
ஐநா பாதுகாப்பு கவுன்சில் விதித்த பொருளாதார தடை குறித்து ஈரான் கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈரான் அரசு வௌியிட்டுள்ள அறிக்கையில், “பொருளாதார தடைகளை விதிக்க ஐநாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதேசமயம், இந்த தடைகள் எங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. மேலும் ஐநாவின் தடைக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்” என தெரிவித்துள்ளது.