அணுசக்தி பற்றிய பேச்சில் மிக, மிக கவனமாக இருக்க வேண்டும்.. டிரம்புக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ரஷ்யா..!!
மாஸ்கோ: அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப், இரண்டு அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை பொருத்தமான பகுதிகளுக்கு நகர்த்துமாறு உத்தரவிட்டதை அடுத்து அணு ஆயுதங்கள் குறித்து கவனத்துடன் பேச வேண்டும் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கிரெம்ளின் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், அனைவரும் அணுசக்தி பற்றிய பேச்சில் மிக, மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறினார். டிரம்ப்பின் கருத்துக்களுக்கு முன்பே அந்த அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்கள் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பெஸ்கோவ், இந்த விஷயத்தில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்கள் ஏற்கனவே போர்ப் பணியில் உள்ளன என்பது தெளிவாகிறது. இது ஒரு தொடர்ச்சியான செயல்முறை, இதுதான் முதல் விஷயம் என்றார். அணுசக்தி சொல்லாட்சியில் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆனால், பொதுவாக இதுபோன்ற சர்ச்சையில் ஈடுபட நாங்கள் விரும்பவில்லை. மேலும் எந்த வகையிலும் கருத்து தெரிவிக்கவும் விரும்பவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.