நவம்பர் புரட்சி?
கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இரண்டரை ஆண்டுக்கு பிறகு முதல்வர் மாற்றம் என்ற ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று கூறும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் நவம்பரில் புரட்சி ஏற்படும். தலைமை மாற்றம், அமைச்சரவை விரிவாக்கும் நடக்கும் என்று ஆளாளுக்கு கொளுத்தி போட்டு வருகிறார்கள். இந்நிலையில் டி.கே.சிவகுமார் திடீரென டெல்லிக்கு சென்றது. நவம்பரில் அமைச்சரவை விரிவாக்கம் என்று முதல்வர் சித்தராமையா கூறியதால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
அமைச்சரவை மாற்றம் குறித்து கட்சி மேலிடத்தில் இருந்து எந்த சிக்னலும் வரவில்லை என்று அமைச்சர் பரமேஸ்வர் கூறுகிறார். அதே சமயம் அவரே அடுத்த வாய்ப்பாக தலித் தலைவரை முதல்வராக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். முதல்வர் மாற்றம் என்பது பாஜ கிளப்பிய வதந்தி. இதில் எந்த உண்மையும் இல்லை. நவம்பரில் புரட்சி ஒன்றும் வெடிக்காது என்று அமைச்சர்கள் சிலர் கூறுகின்றனர். ஆனால் கட்சி மேலிடம் கூறினால் நானே 5 ஆண்டும் முதல்வராக நீடிப்பேன் என்று சித்தராமையா பேட்டி அளிக்கிறார்.
எனது தந்தை 5 ஆண்டும் முதல்வராக இருப்பார் என்று அவரது மகன் யதீந்திரா கூறுகிறார். இப்படி கர்நாடக காங்கிரஸ் கட்சிக்குள் உச்சகட்ட குழப்பம் நீடிப்பதால், இதற்கு யார் தீர்வு காண்பார்கள் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆக மொத்தம் அனைவரது பதவியுமே ஆட்டம் கண்டுள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், கட்சி மேலிடம் கூறினால் ராஜினாமா செய்ய தயார் என்று அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடாவும், கட்சி பணிக்கு செல்லுமாறு மேலிடம் கூறினால் செல்ல வேண்டியது தான் என்று பிரியாங்க் கார்கேவும் கூறியதால், அமைச்சரவை விரிவாக்கம் உறுதி எனவும் புதுமுகங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தெரிவிக்கிறார்கள்.
காங்கிரசின் ஸ்திர தன்மை இல்லாத நிர்வாகத்தை பாஜ கடுமையாக விமர்சித்து வருகிறது. நவம்பரில் முதல்வர் மாற்றம் என்ற புரட்சி நடக்குமா, அமைச்சரவையில் மாற்றம் வருமா ஆகிய கேள்விகளுக்கு கட்சி மேலிடம் தான் பதிலளிக்க வேண்டும். ஆனால் கட்சி மேலிடம் சித்தராமையா முதல்வராக இருப்பதற்கு எந்த கால நிர்ணயமும் நிர்ணயிக்கவில்லை என்று அமைச்சர் பரமேஸ்வர் கூறுவதையும் நம்பாமல் இருக்க முடியவில்லை என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் பீகார் தேர்தலுக்காக அமைச்சர்களிடம் தலா ரூ.300 ேகாடி நிதி திரட்டி மேலிடத்துக்கு அளித்து தனது பதவியை காப்பாற்றிக்கொள்ள சித்தராமையா முயற்சி செய்கிறார் என்று பாஜ குற்றம்சாட்டியுள்ளது. நவம்பர் புரட்சி, தலைமை மாற்றம் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பேசி தங்களை வருத்திக்கொள்ள வேண்டாம் என்று துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் அறிவுறுத்தியுள்ளார். எது எப்படியோ, நவம்பரில் உண்மையாகவே புரட்சி ஏற்படுமா? அல்லது இது வெறும் புரளியா? என்பது விரைவில் தெளிவாகிவிடும்.
