நவம்பர் 6, 11ம் தேதிகளில் வாக்குப்பதிவு: பீகாரில் 2 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல்; நவம்பர் 14ம் தேதி வாக்கு எண்ணிக்கை; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
புதுடெல்லி: பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேற்று அறிவித்தார். 243 தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. வரும் 14ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்படும். பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக ஐக்கிய ஜனதா தள (ஜேடியு) தலைவர் நிதிஷ்குமார் பதவி வகிக்கிறார். எதிர்க்கட்சி தலைவராக ராஷ்டிரிய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) தேஜஸ்வி யாதவ் உள்ளார். தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 22ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கு முன்பாக தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் கடந்த ஜூன் மாதம் ஆயத்த பணிகளை தொடங்கியது.
வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், 22 ஆண்டுகளுக்குப் பிறகு பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடந்த ஜூன் 24ம் தேதி தொடங்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்குகளை திருடும் பாஜவின் திட்டத்திற்கு தேர்தல் ஆணையம் உதவுவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். மேலும், சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக பீகாரில் அவர் யாத்திரை மேற்கொண்டார்.
ஆனால் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்த தேர்தல் ஆணையம், பீகாரைத் தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்வதாக அறிவித்தது. மேலும், தீவிர திருத்தத்தின் மூலம் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இருந்து 69 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதும் சர்ச்சையாகி உள்ளது. இதுதவிர, பீகார் தேர்தலில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளில் பல புதிய மாற்றங்களையும் தொடங்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இதனால், நாட்டின் எதிர்கால தேர்தல்களின் தொடங்கமாக பீகார் தேர்தல் இருப்பதால் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், பீகாரில் கடந்த 2 நாட்கள் தேர்தல் தயார் நிலை பணிகளை ஆய்வு செய்து விட்டு டெல்லி திரும்பிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும். 121 இடங்களுக்கு வரும் நவம்பர் 6ம் தேதி முதல் கட்ட தேர்தலும், 122 இடங்களுக்கு வரும் நவம்பர் 11ம் தேதி 2ம் கட்ட தேர்தலும் நடத்தப்படும். இதில் பதிவான வாக்குகள் நவம்பர் 14ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 243 தொகுதிகளில் 2 தொகுதிகள் பழங்குடியினருக்கும், 38 தொகுதிகள் பட்டியல் சாதியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பீகார் தேர்தல் அனைத்து தேர்தல்களின் தாயாக இருக்கப் போகிறது. ஏனெனில் இதில் 17 புதிய மாற்றங்கள் அமல்படுத்தப்படுகின்றன. பின்னர் இவை நாடு முழுவதும் நடக்கும் தேர்தல்களில் கடைபிடிக்கப்படும். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் மூலம் பீகார் தேர்தல், நாட்டின் தேர்தல் வரலாற்றில் மிகவும் வெளிப்படையான தேர்தலாக இருக்கும். சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் 69 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த தேர்தல் வெளிப்படையாகவும், அமைதியான முறையிலும் நடத்தப்படுவதை உறுதி செய்ய விரும்புகிறோம். எந்த வன்முறை சம்பவத்தையும் பொறுத்துக் கொள்ளாதபடி, மாநில நிர்வாகத்திற்கு கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
சமூக ஊடகங்கள் மற்றும் பிற தளங்களில் போலி செய்திகள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு கட்சிகள் கோரிக்கைக்கு இணங்க, மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணிக்கையின் கடைசி 2 சுற்றுக்கு முன்பாக தபால் ஓட்டுகள் அனைத்தும் எண்ணி முடிக்கப்படும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 100 சதவீதம் வீடியோ பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பீகாரில் தேர்தல் திருவிழா களை கட்டி உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அங்கு அமலுக்கு வந்துள்ளன.
⦁ மாற்றத்திற்கான தேர்தல்
கடைசியாக நடந்த 2020 தேர்தலில் ஜேடியு கட்சி 43 இடங்களில் மட்டுமே வென்றது. பாஜ 74 இடங்களை கைப்பற்றியது. இம்முறை ஜேடியு, பாஜ, ஜிதன் ராம் மஞ்சியின் எச்ஏஎம் உள்ளிட்ட கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிக்கின்றன. 2020ல் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகிய சிராக் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி மற்றும் முன்னாள் அமைச்சர் உபேந்திர குஸ்வாஹா ஆகியோர் மீண்டும் பாஜ கூட்டணிக்கு திரும்பி உள்ளனர். எதிர்க்கட்சிகளை பொருத்த வரை ஆர்ஜேடி-காங்கிரசின் மகாகட்பந்தன் கூட்டணி இம்முறை அதிக எதிர்பார்ப்புடன் உள்ளது. இத்தேர்தல் மாற்றத்திற்கான தேர்தலாக இருக்கும் என முன்னாள் துணை முதல்வர் ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் பீகார் யாத்திரை நல்ல பலனை தரும் என காங்கிரஸ் நம்புகிறது. இதுதவிர தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி இம்முறை 243 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக கூறியிருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது.
⦁ 2020 தேர்தல் முடிவு
மொத்த இடங்கள் 243
ஆளும் கூட்டணி 125
எதிர்க்கட்சி கூட்டணி 110
⦁ கட்சிகள் வென்ற இடங்கள்
ஆர்ஜேடி 75
பாஜ 74
ஜேடியு 43
காங்கிரஸ் 19
சிபிஐ எம்எல் 12
மற்றவர்கள் 20
⦁ புர்கா அணிந்தவர்கள் அடையாளம் சரிபார்ப்பு
வாக்களிக்க புர்கா அணிந்து வருபவர்களின் அடையாளங்களை சரிபார்க்க வேண்டுமென தலைமைத் தேர்தல் ஆணையருடனான ஆலோசனைக் கூட்டத்தில் பாஜ பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்திருத்தனர். இதை ஏற்றுக் கொண்ட தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேற்று கூறுகையில், ‘‘பர்தா அணிந்த பெண்களின் அடையாளத்தை சரிபார்க்க அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அங்கன்வாடி பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள்’’ என்றார்.
⦁ மொபைல் போன் வைக்க ஏற்பாடு
வாக்காளர்கள் தங்கள் செல்போன்களை வைத்துச் செல்ல வாக்குச்சாவடிகளில் மொபைல்போன் டெபாசிட் கவுன்டர்கள் அமைக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் கூறி உள்ளார். வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டருக்குள் மட்டுமே மொபைல் போன்கள் அனுமதிக்கப்படும். அதுவும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருக்க வேண்டும். வாக்குச்சாவடி நுழைவாயிலில் சிறிய பெட்டி அல்லது சணல் பைகள் வழங்கப்படும். அவற்றில் வாக்காளர்கள் தங்கள் மொபைல் போன்களை வைத்து விட்டு வாக்களிக்க செல்லாம்.
⦁ 7 மாநிலங்களில் இடைத்தேர்தல்
பீகார் தேர்தலுடன் ஜம்மு காஷ்மீர், ஒடிசா, ஜார்க்கண்ட், மிசோரம், பஞ்சாப் தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய 7 மாநிலங்களில் காலியாக உள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் வரும் நவம்பர் 11ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இதில் அளிக்கப்படும் வாக்குகள் நவம்பர் 14ம் தேதி எண்ணப்படும்.