அதிகாரபூர்வ அறிவிக்கை வெளியீடு துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பு மனுதாக்கல் துவங்கியது
புதுடெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அதிகாரபூர்வ அறிவிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.இதை தொடர்ந்து வேட்பு மனுதாக்கல் நடவடிக்கை நேற்று தொடங்கியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21ம் தேதி தொடங்கியது. அப்போது மாநிலங்களவை தலைவராக இருந்த துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் அவையை நடத்தினார். அன்றைய தினம் இரவு திடீரென பதவியில் இருந்து விலகுவதாக தன்கர் அறிவித்தார். மேலும், தன் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார்.
அதில், மருத்துவ காரணங்களுக்காக பதவி விலக முடிவு எடுத்ததாக ஜெகதீப் தன்கர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், 17வது துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் செப்டம்பர்,9ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அதிகாரபூர்வ அறிவிக்கையை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதன்படி, வேட்புமனுக்கள் தாக்கல் உடனடியாக துவங்கியது.
மனு செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 21 ம்தேதி. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஆகஸ்ட் 22 ம் தேதி நடைபெறும். போட்டியில் இருந்து வாபஸ் பெறுவதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 25 ஆகும். துணை ஜனாதிபதி தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமான நிலை உள்ளது. துணை ஜனாதிபதி மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மாநிலங்களவை நியமன உறுப்பினர்களும் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள்.
543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு தொகுதி காலியாக உள்ளது. 245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் ஐந்து இடங்கள் காலியாக உள்ளன. இரு அவைகளின் கூட்டு பலம் 786 ஆகும். மேலும் தகுதியுள்ள வாக்காளர்களும் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொண்டு, வெற்றி பெறும் வேட்பாளருக்கு 394 வாக்குகள் தேவைப்படும்.
மக்களவையில் பாஜ கூட்டணிக்கு 293 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. மாநிலங்களவையில் ஆளும் கூட்டணிக்கு 129 உறுப்பினர்கள் உள்ளனர். நியமன உறுப்பினர்களும் ஆளும் கூட்டணிக்கே வாக்களிப்பர் என தெரிகிறது. இதன் மூலம் ஆளும் கூட்டணிக்கு இரு அவைகளிலும் 422 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இதனால் ஆளும் கட்சி வேட்பாளர் எளிதில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.