கட்சிப் பதிவை ஏன் ரத்து செய்யக்கூடாது?.. 6 தமிழக கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு தலைமை தேர்தல் அலுவலர் நோட்டீஸ்
சென்னை: 2019ம் ஆண்டு முதல் எந்த தேர்தலிலும் போட்டியிடாத 6 கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 29கி-ன் கீழ் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி கீழ்க்கண்ட சலுகைகளை பெறுகிறது. அதாவது, வருமான வரி விலக்கு (பிரிவு 13கி வருமான வரி சட்டம்). அங்கீகாரம் (தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு பத்தி 6), பொது தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை (தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு பத்தி 108) அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள், நட்சத்திர பிரச்சார நியமனம் ஆகிய சலுகைகளைப் பெறும். அத்துடன் பதிவு செய்யப்பட்ட கட்சியானது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 29கி-ன் படி தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் தேர்தல்களில் வேட்பாளர்களை நியமனம் செய்ய வேண்டும்.
இதில் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் வரம்பிற்கு உட்பட்ட முகவரியில் உள்ள கீழ்கண்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கோகுல மக்கள் கட்சி, இந்தியன் லவ்வர்ஸ் பார்டி, இந்தியன் மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகிய பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகள் கடந்த 2019ம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளாக எந்த ஒரு தேர்தலிலும் வேட்பாளர்களை போட்டியிட நியமிக்கவில்லை என்பதற்காக இந்த தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு காரணம் கேட்கும் குறிப்பாணை அனுப்பி, விசாரணை செய்து அறிக்கை அனுப்பி வைக்க தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
எனவே, மேற்குறிப்பிட்டுள்ள கட்சிகளுக்கு சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு செயலர் அவர்களின் கடிதம் எண் 6580/2025-1 பொது (தேர்தல் 3) துறை நாள் 12.08.2025ன் படி தங்கள் கட்சியின் பதிவினை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்கான காரணத்தினை தலைமை தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட் 26ம் தேதியன்று நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக அளிக்க காரணம் கேட்கும் குறிப்பாணை சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு சார்வு செய்யப்பட்டுள்ளது.