இரட்டை வாக்காளர் சர்ச்சை; பீகார் துணை முதல்வருக்கு நோட்டீஸ்: 14க்குள் பதிலளிக்க தேர்தல் கமிஷன் உத்தரவு
பாட்னா: இரண்டு தொகுதிகளில் வாக்காளராகப் பதிவுசெய்துள்ளதாக பீகார் துணை முதல்வர் மீது எழுந்த புகாரைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு அறிவிப்பாணை அனுப்பியுள்ளது. பீகார் மாநில துணை முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான விஜய் குமார் சின்ஹாவுக்கு இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பதாகவும், அவர் லக்கிசராய் மற்றும் பாட்னாவில் உள்ள பாங்கிபூர் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளராகப் பதிவு செய்துள்ளதாகவும் முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டினார். மேலும் இரண்டு சட்டமன்ற தொகுதியில் தனது பெயரை பதிவு செய்துள்ள துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, பீகார் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் சின்ஹா இரு தொகுதிகளிலும் வாக்காளராக இருப்பதற்கான வரைவு வாக்காளர் பட்டியலின் மாதிரியை பகிர்ந்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த பாஜகவின் மூத்த தலைவர் ஜெகதாம்பிகா பால், தேஜஸ்வி யாதவும் இரண்டு இடங்களில் வாக்காளராகப் பதிவு செய்துள்ளார் என்று அவரது மாதிரியை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த அரசியல் மோதல்கள் வலுத்த நிலையில், பாங்கிபூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பதிவு அதிகாரி, துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹாவுக்கு தற்போதுள்ள வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், இரண்டு வெவ்வேறு சட்டமன்றத் தொகுதிகளின் வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றதற்கான விளக்கத்தை வரும் 14ம் தேதி மாலை 5 மணிக்குள் அளிக்குமாறு கோரப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த விஜய் குமார் சின்ஹா, ‘நான் ஒரு இடத்தில் மட்டுமே வாக்களிக்கிறேன். தேஜஸ்வி யாதவ் தவறான தகவல்களைக் கொடுத்து மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம்தான், பாங்கிபூர் தொகுதியிலிருந்து எனது பெயரை நீக்கி, லக்கிசராய் தொகுதியில் சேர்க்க விண்ணப்பித்தேன். ஆனால், சில காரணங்களால் பாங்கிபூரிலிருந்து என் பெயர் நீக்கப்படவில்லை’ என்று விளக்கமளித்தார்.