இது ராஜதந்திரமல்ல, பலவீனம் சீனாவிடம் அடிபணிந்தது மோடி அரசு: காங். கடும் தாக்கு
புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடி, அதிபர் ஜின்பிங் சந்திப்பை பின்வரும் விஷயங்களைக் கொண்டு மதிப்பிட வேண்டும். ஜூன் 2020ல், கல்வான் பள்ளத்தாக்கில் சீன ஆக்கிரமிப்பால் நமது வீரர்களில் 20 பேர் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். ஆனாலும், சீனா எந்த ஆக்கிரமிப்பும் செய்யவில்லை என மோடி நற்சான்றிதழ் கொடுத்தார். லடாக்கில் சீனா உடனான எல்லையில் முந்தைய நிலையை முழுமையாக மீட்டெடுக்க தவறிய போதிலும், மோடி அரசு சீனா உடன் சமரசத்தை முன்னெடுத்துச் சென்றுள்ளது. இது அவர்களின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துகிறது.
ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு உதவிய சீனா, ஆயுதங்களை கொடுத்தது மட்டுமின்றி உளவுத்தகவல்களையும் பகிர்ந்துள்ளது. இதற்கு பதிலடி கொடுப்பதற்குப் பதிலாக, மோடி அரசு அமைதியாக ஏற்றுக்கொண்டு, இப்போது சீனாவிற்கு வெகுமதி அளித்து வருகிறது.
திபெத்தில் பிரமாண்ட நீர்மின் நிலைய அணையை சீனா கட்டுவதன் மூலம் நமது வடகிழக்கு மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும். இப்பிரச்னை குறித்து மோடி அரசு ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மற்ற நாடுகளைப் போல் இல்லாமல் சீன இறக்குமதியாளர்கள் சுதந்திரமாக கட்டுப்பாடின்றி இந்தியாவில் தங்கள் தயாரிப்புகளை குப்பை போல் குவிப்பது மூலம் நமது சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தொடர்ந்து அழிந்து வருகின்றன.
இதுபோன்ற சீன ஆக்கிரமிப்பு மற்றும் கொடுமைப்படுத்துதல் மற்றும் மோடி அரசின் முதுகெலும்பற்ற தன்மை மூலம் இந்திய வெளியுறவுக் கொள்கையின் புதிய இயல்பு வரையறுக்கப்பட வேண்டுமா? நிச்சயம் இது ராஜதந்திரம் அல்ல. பலவீனம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.