தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம்!
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வட மாவட்டங்களில் இயல்பைவிட கூடுதலாக மழை பெய்யும் எனவும் கணித்துள்ளது. தமிழ்நாட்டில் அக்டோபர் 16, 17 தேதிகளில் 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் கணித்துள்ளது.
அரபிக் கடலின் தென்கிழக்கு பகுதி மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவி வருகிறது. எனவே தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் வரும் அக்டோபர் 19 அன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் கன மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை இன்று முதல் தீவிரமடையும் நிலையில் தென் மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இன்றும் சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருப்பூர், கோவை, ஈரோடு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மட்டும் கன மழை கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாளை மறுநாள் (அக்.18) நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூ,ர் திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தீபாவளி நாளான அக்டோபர் 20 அன்று நீலகிரி, கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement