வடகிழக்கு மாநிலங்களுக்காக 3 மாநில கட்சிகள் இணைந்தன: விரைவில் தனி இயக்கம் அறிவிப்பு
புதுடெல்லி: மேகாலயாவின் ஆளும் கட்சியான தேசிய மக்கள் கட்சியின் தலைவரும் முதல்வருமான கான்ராட் சங்மா, திரிபுரா மாநிலத்தின் இரண்டாவது பெரிய கட்சியான திப்ரா மோதா கட்சியின் தலைவர் பிரத்யோத் மாணிக்யா, நாகாலாந்து மாநில பாஜ முன்னாள் செய்தித் தொடர்பாளர் எம்.கிகோன் ஆகியோர் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கான்ராட் சங்மா, ‘வட கிழக்குக்கான ஒரு தனித்துவமான புதிய அரசியல் அமைப்பை உருவாக்க நாங்கள் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழு தனது அறிக்கையை 45 நாட்களுக்குள் அளிக்கும். எங்கள் கட்சிகள் ஒன்றிணைந்து சரியான நேரத்தில் ஒரு அரசியல் அமைப்பாக மாறும்’ என தெரிவித்தார். 3 மாநிலங்களில் இனி தனியாக புதிய கொடி மற்றும் சின்னத்துடன் ஒரு புதிய கட்சி உருவாக்கப்படும் என்றும், கட்சி கட்டமைப்பை உருவாக்க 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.