வடகிழக்குப் பருவமழை எதிரொலியாக சென்னையில் தயார் நிலையில் 457 மர அறுவை இயந்திரங்கள்
சென்னை: வடகிழக்குப் பருவமழை எதிரொலியாக சென்னையில் 457 மர அறுவை இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ஜூலை 1 முதல் இதுவரை மழையால் பாதிப்பு ஏற்படுத்தும் நிலையில் இருந்த 66,117 மரங்களின் கிளைகள் கத்தரித்து அகற்றப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, முதலமைச்சரின் உத்தரவின்படி, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ள மரங்களின் கிளைகளை கத்தரித்து அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த 17ம் தேதி காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை சராசரியாக 267.80 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும், இன்று காலை 8.30 மணி முதல் காலை 11 மணி வரை சராசரியாக 5.89 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.அதிகபட்சமாக மேடவாக்கம் சந்திப்பில் 11.40 மி.மீ. மழைப்பொழிவும் (பெருங்குடி மண்டலம்), குறைந்தபட்சமாக முகலிவாக்கம் பகுதியில் 0.60 மி.மீ (ஆலந்தூர் மண்டலம்) பெய்துள்ளது. சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 15 மண்டலங்களில் ஜூலை 1 முதல் இதுவரை மொத்தம் 66,117 மரங்களின் கிளைகள் கத்தரித்து அகற்றப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்காக 15 ஹைட்ராலிக் மர அறுவை இயந்திர வாகனங்கள், 2 ஹைட்ராலிக் ஏணிகள், 224 கையடக்க மர அறுவை இயந்திரங்கள், 216 டெலஸ்கோபிக் மர அறுவை இயந்திரங்கள் என மொத்தம் 457 மர அறுவை இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
மேலும், தற்போது தொடங்கியுள்ள வடகிழக்குப் பருவமழையின் காரணமாக விழுந்த மரங்கள் மற்றும் மரங்களின் கிளைகளை அகற்றும் பணிகளும் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 17ம் தேதி முதல் தொடங்கிய வடகிழக்குப் பருவமழையின் காரணமாக நேற்று வரை 55 மரங்கள் மற்றும் மரக்கிளைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இன்று மழையின் காரணமாக விழுந்துள்ள 4 மரங்கள் மற்றும் மரக்கிளைகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், வடகிழக்குப் பருவமழையின் காரணமாக விழும் மரங்களை உடனுக்குடன் அகற்றுவதற்காக மண்டலத்திற்கு தலா 12 பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மரக்கழிவுகளை அப்புறப்படுத்துவதற்காக ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா ஒரு டாடா ஏஸ் வாகனம் என 15 வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.