வடகிழக்கு பருவமழை தொடங்கி இயல்பை விட 59 சதவீதம் மழை பதிவு: புயலாக மாறுமா என்பது இன்று தான் தெரியும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் அமுதா பேட்டி
சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கி, இதுவரை இயல்பை விட 59 சதவீதம் மழை பதிவாகியுள்ளது என்றும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா என்பது இன்று தான் தெரியும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் அமுதா கூறியுள்ளார். தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், காவிரிப்படுகை மாவட்டங்களிலும் மழை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் அமுதா சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இதுவரை இயல்பை விட 59 சதவீதம் மழை பதிவாகி உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 5:30 மணி அளவில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அதே பகுதியில் 8.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு திசையில் நகர்ந்து இன்று மதியம் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தமிழகம் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உண்டு.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதிசென்னையில் இருந்து 400 கி.மீ தொலைவில் நிலவுகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு தீவிர நிலைக்கு செல்லும் போது தான் அவை புயலாக மாறுமா என்பதை ஓரளவுக்கு சரியாக சொல்ல முடியும். இன்று அதுபற்றி தெரியவரும். தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பொழிந்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பொழிந்துள்ளது. இதனால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. 4 இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளது. கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும். சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.